தற்கொலை தாக்குதல் நடத்த வந்த புலி உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தும் முன்னர், அவர்களை மடக்கி பிடித்து கைது செய்த வீரர்கள் தற்போது சிறையில் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்கொலை தாக்குதல் நடத்த வெடிகுண்டை கொண்டு வந்த புலி உறுப்பினர் வெளியில் இருப்பதாகவும் அவரை பிடித்து கொடுத்த படையினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
வெலிவேரிய கிரிகிகந்தே பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே மகிந்த ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
அவரது உடல் நலன் குறித்து அறிய நான் சென்றிருந்தேன். வீரவங்ச தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கு எதிரில் உள்ள சிறைக் கூண்டிலில் நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக உயிரை பணயம் வைத்து போராடிய 6 இராணுவத்தினர் இருக்கின்றனர்.
மேலும் சில படையினர் தேசிய வைத்தியசாலையில் இருக்கின்றனர்.
நாட்டின் பிரச்சினைகளுக்கு மாத்திரமல்ல மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முடியாத ஆட்சியாளர்கள் இருக்கும் காலத்தில் துக்கத்தையும் கஷ்டங்களையும் கடவுளிடம் கூற வேண்டும் என்று எண்ணி மக்கள் வழிப்பாட்டு தலங்களுக்கு செல்ல நேர்ந்துள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.