ஒரு வீட்டில், தங்கம் தங்க வேண்டுமானால், என்ன வகையான ஜாதக அமைப்பு இருக்கவேண்டும் என்று பார்ப்போமா…
ஜோதிட ரீதியாக குரு என்ற சொல்லப்படும் வியாழ பகவான்தான் தங்கத்தின் அதிபதியாகத் திகழ்கிறார். பொன்னன் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
இவர் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, கேந்திரம் அல்லது திரிகோண அந்தஸ்தில் இருந்தால், இவர்களது வீட்டில் தங்கம் இருந்துகொண்டே இருக்கும்.
குருவானவர் சனி, சுக்கிரன், புதன் சாரம் பெற்று இருந்தாலும் தங்கம் வாங்கும் யோகம் உண்டு என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
ஜன்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர் குரு சாரம் பெற்றிருந்தாலும், 5-ஆம் வீட்டில் உள்ள கிரகம் 2-ஆம் வீட்டின் அதிபதியின் பார்வை பெற்றாலோ அல்லது 2-ஆம் வீட்டில் இருந்தாலோ அவர்கள் வாங்கும் நகைகள் அவர்கள் வீட்டில் லட்சுமி கடாட்சத்தைக் கொண்டு வரும்.
ராகுவும், சுக்கிரனும் நட்பு பெற்ற வீட்டில் இணைந்து இருந்தாலோ உபரி வருமானம் எனும் சேமிப்பு வருமானம் பெருகும். இப்படிப்பட்ட அமைப்பில் உள்ளவர்கள் சேமிப்புச் சீட்டில் சேர்ந்து அதன் மூலமாக நகை மற்றும் ஆபரணங்களைப் பெறும் யோகத்தைப் பெறுவார்கள். நாம் தங்கநகைகளைப் பல்வேறு நோக்கங்களுக்காக வாங்கிப் பயன்படுத்துவோம்.
வேறு தொழில் முதலீட்டுக்காக நகைகளை வங்கியில் வைப்பதாக இருந்தால், திங்கள், வியாழக்கிழமை நாட்கள் மிகவும் நன்று. மற்றவர்களிடம் பணம் புரட்டுவதாக இருந்தால், ஞாயிற்றுக்கிழமையில் நகை கொடுத்து பணம் பெறலாம்.
அப்படிச் செய்தால், உடனுக்குடன் சீக்கிரமாக நகையை மீட்டுவிட முடியும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நகைகளை அடமானம் வைப்பதோ அல்லது விற்பதோ கூடாது.
கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி இந்த நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் தங்க நகைகளை இரவல் கொடுப்பது கூடாது.
திருமகள் கொட்டும் பொற்காசுகள் உள்ள படத்தை எப்போதும் வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் தங்கம் எப்போதும் தங்கும்.