நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வந்திருந்தால், தமிழக மீனவர்களின் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்’ என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மீன்வளத்துறை அமைச்சக ஆலோசகர் அந்தோணிமுத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் புதிய வீடுகளைப் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி, ஏப்ரல் மாதம் 9-ம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று, வீடுகளை வழங்க இருந்தார். லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ‘ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது’ என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று ரஜினிகாந்த், தனது இலங்கைப் பயணத்தை ரத்துசெய்தார்.
மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து, தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு சுமூகமான தீர்வுகாண வேண்டுமென்று வேண்டுகோள் வைக்க எண்ணியிருந்தேன்’ என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
ரஜினியின் இலங்கைப் பயண ரத்து முடிவைப் பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ள நிலையில், பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் இலங்கை வந்திருந்தால், தமிழக மீனவர் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சக ஆலோசகர் அந்தோணிமுத்து தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் இன்று அளித்த பேட்டியின்போது இவ்வாறு கூறிய அவர், ரஜினிகாந்த் வருகைதந்து கோரிக்கை வைத்திருந்தால், இலங்கை அதிபர் நிராகரிக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.
மேலும், அரசியல் சாயம் பூசப்பட்டு, ரஜினிகாந்தின் வருகை தடுக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.