திருகோணமலை மாவட்டத்தில் 7 சுகாதார சேவைப் பிரிவுகளில் பரவிய டெங்கு நோய் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஏ.லதாஹரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் மூலம் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் நிலைமை மேலும் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் நேரடி கண்காணிப்பின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 22ம் திகதி முதல் நுளம்பு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் இந்த 7 பிரிவுகளிலும் 2923 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆகும்.
இருப்பினும், கடந்த 2 தினங்களில் திருகோணமலை வைத்தியசாலை, கிண்ணியா ஆதார வைத்தியசாலை மற்றும் மூதூர் மாவட்ட வைத்தியசாலைகளில் குறைந்த எண்ணிக்கையான நோயாளர்களே அனுமதிக்கப்பட்டனர்.
திருகோணமலை மாநகரசபை எல்லைப்பகுதிக்குள் நாளாந்தம் 650 வீடுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. புகைவிசிறல் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுகிறது. வீடுகளை சுத்தமாக வைத்திருப்பதற்காக பொதுமக்களை தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.