பரத், நமீதா நடிப்பில் திகில் படமாக உருவாகியுள்ள படம் ‘பொட்டு’. இப்படத்தில் இனியா, சிருஷ்டி டாங்கே, தம்பி ராமையா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, ஷாயாஜி ஷிண்டே, மன்சூரலிகான், சாமிநாதன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வடிவுடையான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் இசையமைப்பாளர் அம்ரீஷ் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.
முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகியிருக்கும இப்படத்தில் பரத், நமீதா ஆகியோர் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து அசத்தியிருக்கிறார்கள். பரத் இப்படத்தில் பெண் வேடத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 90 நாட்களே நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, தமிழில் பொட்டு என்ற பெயரிலும், தெலுங்கில் பொட்டூ என்ற பெயரிலும், இந்தியில் பிந்தி என்ற பெயரிலும் இப்படம் வெளியாகவிருக்கிறது. தற்போது அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் ஆடியோ வெளியீடு மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இனியன் ஹரிஷ் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் இப்படம் வெளிவரவிருக்கிறது.