உலகில் அதர்ம செயல்கள் தலைதூக்கி, தர்மம் தடுமாறும் போது நல்லவர்களை காப்பதற்காகவும், தீயவர்களை அழிப்பதற்காகவும் யுகங்கள் தோறும் அவதாரம் செய்வதாக பகவான் கிருஷ்ணன் கூறுகிறார்.
அவதாரம் என்ற வடமொழி சொல்லுக்கு கீழே இறங்கி வருதல் என்று பொருள்.
மக்களின் துன்பங்களை போக்க இறைவன் ஏதோ ஒரு உருவில் உலகில் அவதரிப்பதையே அவதாரம் என்பர். மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் இதுவரை நிகழ்ந்த ஒன்பது அவதாரங்களும் இதை உணர்த்துகின்றன.
சூரபத்மன் என்ற அசுரனிடம் இருந்து மக்களை காக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர், முருகன். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
முன்னொரு காலத்தில் பத்மாசுரன் என்ற அரக்கன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அரக்கன் முன் தோன்றினார். மனமகிழ்ந்த பத்மாசுரன் சிவபெருமானிடம் சிவனுக்கு இணையான ஒருவரை தவிர வேறுயாராலும் அழிக்க முடியாத வரம் பெற்றான். பின்னர் வரத்தின் பலத்தால் யாரும் தன்னை வெல்ல முடியாது என்ற ஆணவத்தால் தேவர்களுக்கு பல கொடுமைகள் செய்தான். அவனது தொல்லைகளை தாங்க முடியாமல் துன்பப்பட்ட தேவர்கள் சிவனிடம் முறையிட சென்றனர்.
அப்போது சிவன் தவத்தில் இருந்தார். இதைப்பயன்படுத்தி கொண்ட தேவர்கள் தங்களை துன்புறுத்தும் அரக்கனை அழிக்க தங்கள் அம்சமாக ஒருவரை உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.
சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உருவாக்கி கங்கை நதியில் விட்டார். வைகாசி மாதத்து விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் இவ்வுலக மக்கள் அனைவரின் உயர்விற்காக உதித்தார்.
‘அருவமும் உருவமாகி அநாதியாய்ப்
பலவா யொன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர்
மேனியாகக்
கருணைகூர் முகங்களாறும்
கரங்கள் பன்னிரண்டுங்கொண்டே
ஒரு தின முருகன் வந்தாங்
குதித்தனன் உலகமுய்ய’
என முருகனின் தோற்றம் பற்றி கந்தபுராணம் கூறுகிறது.
அழகு என்பதற்கு மறு பெயர் முருகு. அழகு உள்ளவன் முருகன். அழகன் முருகன் தோன்றிய திருநாள் வைகாசி விசாகம். அதனால் முருகனை விசாகன் என்றும் விசாகப்பெருமாள் என்றும் அழைக்கின்றனர்.
வைகாசி விசாகத்தை முருகனின் பிறந்ததினமாக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
பிறப்பும், இறப்பும் அற்ற இறைவனுக்கு வருடத்தில் ஒருநாள் பிறந்த தினமாக கொண்டு அவனை ஆராதனை செய்து தீபஆராதனைகள் செய்து மகிழ்கின்றனர். ‘அன்பெனும் பிடியில் அகப்படும் மலையே’ என்பதற்கேற்ப முருகப்பெருமானும் பக்தர்களின் அன்பு பிடியில் சிக்குண்டு அவர்களின் நன்மையின் பொருட்டு அவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு அருள்புரிகின்றான்.
சரவண பொய்கையில் விழுந்த அந்த பொறிகள் ஆறு குழந்தைகளாயின. அந்தக் குழந்தைகளை ஆறு கிருத்திகை பெண்கள் எடுத்து வளர்த்தனர். அந்த ஆறு குழந்தை களையும் பராசக்தி எடுத்து அணைக்க அந்த அவை ஆறுமுகமும், பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே ஒரு குழந்தையாக மாறின.
முருகன், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் ‘கார்த்திகேயன்’ என்றும், பக்தர்கள் ஒவ்வொருவர் மனதிலும் வசிப்பதால் ‘குகன்’ ஆகவும், சரவண பொய்கையில் இருந்து வந்ததால் ‘சரவணபவன்’ என்றும், ஆறு முகங்களை கொண்டவராக இருப்பதால் ‘ஆறுமுகன்’ என்றும் அழைக்கப்படுகிறார். முருகப்பெருமான் பாலபருவத்தில் லீலைகள் பல செய்தார். பிரம்மாவுக்கு ‘ஓம்’ என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால் அவரை சிறையில் அடைத்தார். தந்தைக்கு பாடம் சொல்லி ‘தகப்பன் சாமி’ என்ற பெயரை பெற்றார்.
தமிழ் மூதாட்டி அவ்வையிடம் நாவற்கனியை கொடுத்து சுட்ட பழம் வேண்டுமா?, சுடாத பழம் வேண்டுமா? எனக்கேட்டு அறிவுச்சுடராய் திகழ்ந்தார். கனிக்காக உலகையே சுற்றி வந்து தண்டாயுதபாணியாய் பழனியில் தனித்து நின்றார். பின்னர் அவர் தேவர்களின் தேவசேனாதியாகி சூரனை வென்று தேவசேனாதிபதி எனப்பெயர் பெற்றார். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பேதமில்லாமைக்கு தெய்வயானை, வள்ளியை மணமுடித்து உலகிற்கு உணர்த்தினார்.
தீமைகளை அழித்து, நன்மைகளை காப்பதற்காகவே ஏற்பட்டது முருகனின் தோற்றம்.
விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.
வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்.
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.
வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘நம ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.
முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.