பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்றாலும், விசாரணைகளில் ஈடுபடமாட்டார்கள் என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில், சிறிலங்காவின் நீதிப் பொறிமுறை வெளிநாட்டு, மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்களிப்பு என்பதற்கு பல வரையறைகள் உள்ளன. சில தரப்புகள், பங்களிப்பு என்பதன் அர்த்தம், வழக்குகளை வெளிநாட்டு நீதிபதிகள் விசாரிக்கின்ற கலப்பு நீதிமன்றமே என்று கூறுகின்றன.
ஆனால் சிறிலங்கா அதிபர், பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோர், கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று தெளிவாக கூறியுள்ளனர்.
கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க முடியாமைக்கு பல காரணங்கள் உள்ளன. சிறிலங்காவின் அரசியலமைப்பின் படி வெளிநாட்டு நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்க முடியாது,
இன்னொரு வகையில் சொல்வதானால், பங்களிப்பு என்பது, கலப்பு என்று அர்த்தமாகாது. இதனைப் புரிந்து கொள்வதில் சிலருக்கு நிச்சயமாக சிக்கல்கள் உள்ளன.
பங்களிப்பு என்பதை, நிபுணத்துவ அல்லது அவதானிப்பு என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வழக்குகளை விசாரிக்க முடியாது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் தலைமை நீதிபதி பகவதி, நிபுணத்துவ மற்றும் அவதானிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்.
இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் தருஸ்மன் உள்ளிட்ட பல உதாரணங்கள் இதற்கு உள்ளன.
அரசி்யல் இலாபம் கருதி செயற்படும் தரப்புகள் தான், பங்களிப்பு என்பதை கலப்பு நீதிமன்றம் என்றும், விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பர் என்றும், மக்களைக் குழப்ப முனைகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.