எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி’ படத்தை பார்த்தவர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய கேள்வி எழும். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்பதுதான் அந்த மிகப்பெரிய கேள்வி. அந்த கேள்விக்கு தற்போது உருவாகிவரும் ‘பாகுபலி-2’ படத்தில் விடை கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், அதற்கு முன்னதாக இப்படத்தில் அந்த கேள்விக்கான விடையை இப்படத்தில் கட்டப்பாவாக நடித்த சத்யராஜே அறிவித்துள்ளார். நேற்று, ‘பாகுபலி-2’ படம் ரிலீசாவதற்கு முன்பாக படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.
அப்போது நடிகர் சத்யராஜ் பேசும்போது, ‘பாகுபலி’ படத்தில் ஏன் கட்டப்பா பாகுபலியை கொன்றார் என்று எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. அதற்கு நான் இப்போது பதில் சொல்லிவிடுகிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர் சோபு எனக்கு நல்ல சம்பளம் கொடுத்து பிரபாஸை கொல்லச் சொன்னார். எனது இயக்குனர் ராஜமௌலியும் பாகுபலியை கொல்ல எனக்கு உத்தரவிட்டார். அவர்கள் சொன்னபடி நான் செய்தேன். இல்லையென்றால், பிரபாஸை நான் எதற்கு கொல்லப் போகிறேன்? என்று அவர் தெரிவித்துள்ளார். சத்யராஜின் இந்த பேச்சும் அனைவரையும் கலகலக்க வைத்தது.
இந்நிகழ்ச்சியில், இயக்குனர் ராஜமௌலி, பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி 360 டிகிரி தொழில்நுட்பத்தில் பார்க்கும்படி உருவாக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் ‘பாகுபலி-2’ தெலுங்கு பதிப்பின் பாடல்களும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.