முதலில் தெலுங்கு படங்களில் நடித்து வெற்றிபெற்ற பின் அடுத்ததாக தமிழ் படங்களில் கவனம் செலுத்தவுள்ளதாக கூறியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரேமோ’ படம் சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்றது. அதையடுத்து விஜய்யுடன் நடித்த ‘பைரவா’ படத்தை அவர் மிகவும் அதிகமாக எதிர்பார்த்தார். ‘பைரவா’ படம் கீர்த்தி சுரேஷை ஏமாற்றி விட்டது. அதனால் தற்போது அவரது கவனம் தெலுங்கு பக்கம் திரும்பியுள்ளது.
தமிழில் சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் மட்டும் நடித்து வருகிறார். ஆனால், தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்த ‘நீனுலோக்கல்’ வெற்றி பெற்றதால், இப்போது மூன்று மெகா படங்களில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதோடு சாவித்ரி வாழ்க்கை கதையில் உருவாகும் மகாநதி படத்தில் சாவித்ரியாக நடிக்கவுள்ளார்.
மேலும் அவரது சம்பளமும் ரூ. 3 கோடியாக உயர்ந்துள்ளது. அதனால் தெலுங்கில் இன்னும் பெரிய இடத்தை பிடித்துவிடவேண்டும் என்று ஐதராபாத்திலேயே முகாமிட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
நடிகைகள் சமந்தா, ராகுல்பிரீத்சிங் உள்ளிட்ட சிலர் முதலில் தமிழில் நடித்து சரியான லிப்ட் கிடைக்காமல் தெலுங்கில் பிரபலமாகி பின்னர் தமிழுக்கு வந்தது போன்று, தானும் தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பிறகு தமிழுக்கு வந்து கூடுதல் கவனம் செலுத்துவேன் என்று கூறியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.