சிங்கப்பூரில் ஒரு தம்பதியர் தங்களின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை பட்டினியாக வைத்திருந்து துன்புறுத்திய குற்றத்திற்காக நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த தெல்மா காவிடான் என்ற அந்த வீட்டுப் பணிப்பெண், ஒரு வருடத்தில் தனது உடல் எடையில் 20 கிலோவை, அதாவது தனது உடல் எடையில் 40 சதவீதத்தை இழந்துள்ளார்.
அவருக்கு தினமும் இரு வேளைகளில் மட்டுமே, அதுவும் குறைந்த அளவு உணவு வழங்கப்பட்டுள்ளது. காவிடானின் கடவுச்சீட்டு மற்றும் மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் ஒரு பெண்கள் காப்பகத்துக்கு உதவி கோரி தப்பிச் சென்றுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் இவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு மூன்று மாதங்கள் மற்றும் மூன்று வாரங்கள் சிறைத்தண்டனை பெற்றுத் தந்துள்ளனர்.
தங்களின் வீட்டிலேயே தங்கி பணிபுரிய, பெரும்பாலான சிங்கப்பூர்வாசிகள் அண்டை நாடுகளில் இருந்து பணியாட்களை அமர்த்துகின்றனர். இது போன்ற துஷ்பிரயோகங்கள் ஆங்காங்கே நடக்கின்றன.
தனது பாஸ்போர்ட் மற்றும் மொபைல் ஃபோன் ஆகியவற்றை தான் பணிபுரிந்த இடத்தின் உரிமையாளர்கள் பறிமுதல் செய்து விட்டதால் தன்னால் முன்னதாக உதவி கோர இயலவில்லை என காவிடான் தெரிவித்துள்ளார்.
இறுதியாக கடந்த 2014 ஏப்ரல் மாதத்தில் தப்பிச் சென்ற அவர், இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உதவும் குழுவொன்றின் உதவியை நாடியுள்ளார்.
காவிடானை தங்கள் வீட்டில் பணியில் அமர்த்திய நிதித்துறை வணிகர் லிம் சூன் ஹுங் மற்றும் அவரது மனைவி ஸோங் சூயி ஃபூன் ஆகியோர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.
உணவு வழங்குவதில் காவிடானை தங்களுக்கு சமமாகவே நடத்தியதாகவும், உணவு மற்றும் வீட்டை சுத்தப்படுத்துவது ஆகிய விடயங்களில் ஸோங்கின் அதீத எண்ணங்களால் அவர்கள் உணவு உண்பதும், குளிப்பதும் அடிக்கடி நடப்பதல்ல என்றும் அவர்கள் கூறினார்கள்.
ஸோங்கிற்கு ஓசிடி எனப்படும் தேவையில்லாத மற்றும் மிகுதியான எண்ணங்கள் மற்றும் அச்சங்கள் தோன்றும் மனச்சிக்கல் ஏற்பட்டுள்ளதாக உளவியல் நிபுணர்கள் நீதிமன்ற சாட்சியத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.