யுத்தத்தின்போது ஆங்காங்கே குற்றச் செயல்கள் இடம்பெற்றன என சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை நேற்றையதினம் கோல்பேஸ் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் முடிவெடுக்கவில்லை.
அரசியலில் நுழைவதற்கு விரும்பாவிடினும், நாட்டிற்குச் சேவையாற்றும் வாய்ப்பை நிராகரிக்கமாட்டேன்.
அத்துடன், நான் நல்ல அரசியல்வாதியாக இருப்பேன் எனச் சொல்லமாட்டேன், ஆனால், நான் அரசியலைப் பற்றி சரியாக புரிந்துகொள்ளவில்லையென முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ எப்போதும் கூறுவார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பிரவேசத்தை ஒரு உதாரணமாக எடுத்து, அவரது முறைமைகளை ஆராய்ந்து வருகிறேன்.
போர்க்குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு புதிய விசாரணைப் பொறிமுறைகள் எவையும் தேவையில்லை. தற்போதுள்ள நீதிப் பொறிமுறைகளே போதுமானது.
போரின் போது தனித்தனியான சில குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றன என்பதை நான் நிராகரிக்கவில்லை. ஆனால், முழு இராணுவத்தையும் குற்றம்சாட்டுவது நியாயமானதல்ல.
எனது கட்டுப்பாட்டில் இருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த குழுவொன்று ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த குற்றச்சாட்டு தவறானது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவு அவ்வாறு செயற்பட்டிருந்தால், அப்போதைய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.