நானும் நாலு மணித்தியாலங்களாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். என்ன கூத்தா அடிக்கிறீங்க , குடும்பத்தோட சாவுங்க என கத்திக்கொண்டு வாளினால் என்னை வெட்டினார் என தனஞ்செயன் தர்மிகா என்பவர் யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலை வழக்கு விசாரணை திங்கட்கிழமை மதியம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது இடம்பெற்ற சாட்சி பதிவின் போதே அவ்வாறு சாட்சியம் அளிக்கப்பட்டது.குறித்த வழக்கின் சாட்சியங்கள் மேலும் குறிப்பிடுகையில்,
குடும்பமா சாவுங்க என கத்திக்கொண்டு வெட்டினார்.
இவ் வழக்கில் நான்காவது சாட்சியாக இணைக்கப்பட்டிருந்த எதிரியான தனஞ்செயனின் மனைவி தர்மிகா சாட்சியமளிக்கையில்,
சம்பவத்தினத்தன்று எனது தாயான நிற்குனானந்தன் அருள்நாயகியும் சகோதரானான சுபாங்கனும் சுவாமியறையில் உறங்கிகொண்டு இருந்தனர். மறு அறையில் எனது சகோதரியான மதுஷாவும் அவரது கணவர் யசோதரனும் தனது பிள்ளையான விஷ்னுயனும் உறங்கிக்கொண்டிருந்தனர்.
இதன்போது நள்ளிரவு 12.45 மணியளவில் சத்தம் கேட்டு எழுந்திருந்து பார்த்த போது எனது தாய் தனது கழுத்தின் ஒரு பக்கத்தை பிடித்துக்கொண்டு தனஞ்செயன் வெட்டுறான் என்று கத்தினார். அதன் போது எனது சகோதரனுக்கும் வெட்டு வீழ்ந்திருந்தது. அதனை அடுத்து என் மீதும் வெட்டொன்று வீழவே, நான் வீட்டிற்கு முற்றத்தில் போய் நின்று “காப்பாற்றுங்கோ” என்றும் அக்கா அத்தான் வெளியில வராதீங்கோ என்று கத்தினேன்.
அங்கே வந்த கணவர் எனது கழுத்தை பிடித்து தூக்கி நாலு மணித்தியாலமா பார்த்திட்டு இருக்கேன் என்ன கூத்தா அடிக்கிறீங்க குடும்பத்தோட சாவுங்க என்று சொல்லி வாளால் வெட்ட முற்பட்டார்.நான் வாளினை தடுத்து பிடித்து அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். எனினும் கணவர் என்னை வாளால் வெட்டி காயப்படுத்தினார். அன்று நல்ல நிலவு வெளிச்சம் இருந்ததால் வெட்டியது எனது கணவர் தனஞ்செயன் என்பதை நன்றாக அடையாளம் காண முடிந்தது.
கணவர் வெட்டும் போது இடது கையில், இடது பக்க காதில் ஒரு தோட்டோடு ஒரு பகுதி வெட்டப்பட்டது. முதுகிலும் முள்ளந்தண்டுக்கு அருகாமையில் வலது, இடது இரண்டு பக்கமும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டிருந்தது. அதன் பின்னர் என்னை துக்கி எறிந்து விட்டு சென்றுவிட்டார். அதன் பின்னர் நான் ஒருவாறு எழுந்து வீதிக்கு வந்து சிறிது தூரம் சென்றுவிட்டு அக்காவுக்கும் அத்தானுக்கும் என்ன நடந்தது என்பதை அறிய திரும்பி வந்தேன்.
நான் வந்து வீட்டிற்குள் வராது வீட்டின் மதிலோடு நின்று பார்த்த போது கணவர் ஒன்றரை அடி நீளமான கத்தியுடன் கோலுக்குள் நின்றுகொண்டிருந்தார். நான் வெளியே இருக்கும் போது அயல்வீட்டுக்காரர் முச்சக்கரவண்டியை எடுத்துக்கொண்டு வந்ததார். அதில் நானும் அக்காவின் கணவரான யசோதரனும் ஏறி வைத்தியசாலைக்கு சென்றோம். அப்போது, அக்காவின் கணவர் , தனஞ்செயன் வெட்டிப்போட்டான் மதுவுக்கு (சகோதரி மதுஷா) என்ன நடந்தது என்று தெரியவில்லை என கூறினார்.
அவரது முகத்தில் இரத்தம் வடிந்துகொண்டு இருந்தது, அவரது தலையிலும் காயம் காணப்பட்டது என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் குறித்த எதிரியை சுட்டுவிரலால் சுட்டிக்காட்டி குறித்த சாட்சி அடையாளம் காட்டியிருந்தார். அத்துடன் தம்மால் குறித்த எதிரி கையில் வைத்திருந்த ஆயுதத்தையும் அடையாளம் காட்ட முடியும் எனவும் மன்றில் சாட்சியமளித்திருந்தார்.
மனைவி இறந்தது மூன்று நாட்களுக்கு பிறகே தெரியும்.
இதனை தொடர்ந்து குறித்த வழக்கில் கொலை செய்யப்பட்ட மதுஷாவின் கணவரான ஜந்தாவது சாட்சியாக அழைக்கப்பட்டிருந்த தங்கவேல் யசோதரனிடம் சாட்சிப்பதிவுகள் இடம்பெற்றிருந்தன. இதன்போது சம்பத்தினத்தன்று தானும், தனது மனைவியான மதுஷிகாவும் மனைவியின் சகோதரியின் பிள்ளையான விஸ்னுயனும் ஒர் அறையில் உறங்கிக்கொண்டிருந்தோம்.
இதன்போது நள்ளிரவு 12.45 மணியளவில் பக்கத்து அறையில் இருந்து காப்பாற்றுங்கோ காப்பாற்றுங்கோ என்று சத்தம் வந்தது. நாம் சில நொடிகளில் கதவினை திறந்து கையில் கதவின் பார்க் கட்டையையும் வைத்துக்கொண்டு கோல் லைட்டையும் போட்டுவிட்டு சத்தம் வந்த அறையை நோக்கி பார்த்துக்கொண்டிருந்தேன்.
அதன் போது சுவாமி அறையில் இருந்து தனஞ்செயன் ஒடி வந்தார் அவர் கையில் வாள் இருந்தது. நான் கையில் இருந்த பார் தடியை ஒங்கும் போது அவரும் தமது கையில் இருந்த வாளால் என்னை வெட்டினார். இதனால் எனது வலக் முழங்கைக்கு கீழ் வெட்டு வீழ்ந்தது. அதனால் கையை துக்க முடியாது சுயநினைவை இழந்துவிட்டேன். இதன்பின்னர் நான் வெளியில் போய் மனைவியின் சகோதரியுடன் முச்சக்கரவண்டியில் அச்சுவேலி வைத்தியசாலைக்கு போனது மட்டுமே நினைவு உள்ளது எனத் தொிவித்தாா்.
பின்பு தனது மனைவி உட்பட எனைய இருவரும் இறந்த விடயம் வைத்தியசாலையில் இருக்கும் போது மூன்று நாட்கள் கழித்தே தெரியும் எனவும் அத்துடன், தலையில் இடது பக்கம் வலது கையில் நெஞ்சுபகுதி, முதுகு பகுதியில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது எனவும் சாட்சியம் அளித்தார். அத்துடன் குறித்த எதிரியை சுட்டுவிரலால் சுட்டி அடையாளம் காட்டியதுடன் தனது காயங்களையும் மன்றில் தொட்டுக்காட்டி விபரித்திருந்தார்.
சகோதரியும், மருமகளும் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். அருகில் பிள்ளை உறங்கிக்கொண்டு இருந்தது.
இதனை தொடர்ந்து இவ் வழக்கின் 02ஆவது சாட்சியாக அணைக்கப்பட்டிருந்த கணபதிபிள்ளை பாலசுப்பிரமணியம் சாட்சியமளிக்கையில்,
சம்பவம் நடந்த பின் வந்து பார்த்த போது, சகோதரியான அருள்நாயகியும், மருமகளான மதுஷாவும் பல வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதில், மருமகள் பிணமாக கிடக்க அவருக்கு பக்கத்தில், மற்றைய மருமகளான தர்மிகாவின் பிள்ளை உறக்கத்தில் இருந்தது.
அதன்பின்னர் சடலங்களை அச்சுவேலி வைத்தியசாலையில் கொண்டுபோய் சேர்த்த போதே தனது மருமகனான சுபாங்கனையும் சடலமாக வைத்தியசாலையில் கண்டதாக சாட்சியமளித்திருந்தார்.
சிவில் சாட்சியங்கள் முடிவுறுத்தப்பட்டது.
இவர்களது சாட்சியத்தை தொடர்ந்து இவ் வழக்கின் சாட்சிகளாக அழைக்கப்பட்டிருந்த 03ஆம் மற்றும் 06ஆம் சாட்சிகளிடமும் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டதுடன் இவ் வழக்கின் சிவில் சாட்சியங்கள் முடிவுறுத்தப்பட்டதாக அரச சட்டவாதி மன்றில் குறிப்பிட்டார்.
சான்று பொருளை அடையாளம் காட்ட சாட்சியங்கள் அழைப்பு.
மேலும் குறித்த வழக்கின் சான்று பொருளான குறித்த கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வாள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் அதன் பகுப்பாய்வு முடிவடைந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அச்சுவேலி பொலிஸ் அதிகாரியூடாக கொழும்பில் இருந்து செவ்வாய்கிழமை எடுத்துவந்து புதன்கிழமை குறித்த சாட்சிகள் ஊடாக அடையாளம் காண்பிக்கவும், அதற்காக இவ் வழக்கின் சாட்சியான தனஞ்செயன் தர்மிகா, மற்றும் யசோதரன் ஆகியோரை மீண்டும் அடையாளம் காண்பதற்காக மட்டும் மன்றுக்கு அழைக்கவும் மன்றின் அனுமதியை கோரியிருந்தார்.
இதற்கு எதிரி தரப்பு சட்டத்தரனி ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில் மன்றானது அனுமதி வழங்கி உத்தரவிட்டதுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களுடைய சாட்சியப் பதிவிற்காக செவ்வாய் கிழமை நண்பகல் ஒரு மணிவரை வழக்கை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஒத்திவைத்தார்.
வழக்கின் பின்னணி.
கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியை சேர்ந்த மனைவியின் தாயான நி. அருள்நாயகி , மனைவியின் தம்பியான நி. சுபாங்கன் மற்றும் மனைவியின் அக்காவான யசோதரன் மதுஷா ஆகியோரை படுகொலை செய்து, மனைவியான தர்மிகா மற்றும் மனைவியின் அக்காவின் கணவனான யசோதரன் ஆகியோரை படுகொலை செய்யும் நோக்குடன் வெட்டி காயமேற்படுத்தப்ப்பட்டது.