பிரபல நடிகையாக இருந்தபோது ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்ததாகவும் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பதவி ஏற்ற நிகழ்ச்சியின்போது அவரை நேருக்கு நேராக பார்த்தபோதும் அவர் அழகாகவே காட்சி அளித்ததாகவும் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்தேன்: மனம் திறக்கிறார் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி
புதுடெல்லி:
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்றுவது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறும் செயலாகாது என முன்னர் சட்டரீதியாக விளக்கம் அளித்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவை சமூக வலைத்தளங்கள் மூலமாக தமிழக மக்கள் பாராட்டு மழையில் குளிப்பாட்டினர்.
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா பற்றி தற்போது மறுபதிவு செய்துள்ள ‘மலரும் நினைவுகள்’ மென்மேலும் பாராட்டு மழையில் அவரை நனைவிக்குமா? அல்லது, ரத்தத்தின் ரத்தங்களின் கோபப் பார்வையால் காய்ச்சி எடுக்குமா?.. என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவின்போது இரங்கல் செய்தி வெளியிட்டிருந்த மார்கண்டேய கட்ஜு, அவரை வெகுவாக புகழ்ந்திருந்த நிலையில், தனது இளமைக் காலத்தில் ஜெயலலிதா மீது ஒருதலையாக காதல் கொண்டிருந்ததாக தற்போது குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நடைபெறும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் எதுவாக இருந்தாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களின் வாயிலாக தனது கருத்துகளை பதிவிட்டுவரும் மார்கண்டேய கட்ஜுவை பேஸ்புக்கில் 70 லட்சத்துக்கும் அதிகமான அபிமானிகளும் டுவிட்டரில் சுமார் 2 லட்சம் அபிமானிகளும் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவை முன்னர் ஒருதலையாக காதலித்த ரகசியத்தை தனது 70-வது வயதில் வெளிப்படுத்தியுள்ள கட்ஜுவின் பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், ‘நான் 1946-ம் ஆண்டில் பிறந்தவன், ஜெயலலிதா 1948-ல் பிறந்தவர். சினிமாவில் பிரபலமாகி வந்த ஜெயலலிதா மீது எனது இளம் வயதில் ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. அவர்மீது நான் காதல் கொண்டிருந்தேன், இது அவருக்கு தெரியாது. அதனால், கைமாறு செய்யப்படாத ஒருதலை காதலாகவே அது இருந்தது.
சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் 2004-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவின்போதுதான் முதன்முதலாக ஜெயலலிதாவை நான் நேரில் சந்தித்தேன்.
எனது இளமைக் காலத்தில் அவர்மீது நான் கொண்டிருந்த ஈர்ப்பைப் பற்றி தெரிவிப்பது நாகரிகமாக இருக்காது என்று கருதிய வேளையில், அப்போதும் அவர் அழகாகவே இருந்தார் என்பதை நான் கண்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருவதுடன் ஆயிரக்கணக்கான ‘லைக்’களையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்த பதிவுடன் ஜெயலலிதா நடித்த பாடல் என்று ஒரு யூடியூப் லிங்கையும் அவர் பதிவிட்டுள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக அந்த லிங்க், ஜெயலலிதா நடிக்காத வேறொரு பாடலை நோக்கி நம்மை அழைத்து செல்கிறது.