நல்லாட்சி அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் நிகழ்ச்சிநிரலை தொடர்ந்தும் முன்னெடுத்துச்சென்றால் நாட்டை மயானத்திற்கு கொண்டுசெல்லும் நிலை உருவாகலாம். எனவே நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவகாசம் கோரியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை நேற்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீண்ட நாட்களாக பிணை வழங்கப்படாமல் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவர் நியாயமான காரணங்களை முன்வைத்து பிணை கோரியபோதும் அது மறுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
விமல் வீரவன்சவின் கைதைத் தொடர்ந்து அவர் பக்கம் ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர். அதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கமே ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அத்துடன் அரசாங்கத்திற்கு எதிராகச் செயற்படுபவர்களைத் பழிவாங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இருந்தபோததிலும் அவ்வாறான செயற்பாடுகள் மூலம் எம்மை அடக்கிவிட முடியாது. ஏனெனில் மக்கள் பலம் எமக்குள்ளது.
மேலும் விமல் வீரவன்ச மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டையொத்த குற்றச்சாட்டுள்ளவர்கள் அரசாங்கத்தின் பக்கமும் உள்ளனர். எனினும் அவர்கள் சுதந்திரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இதனூடாக அரசாங்கம் சட்டத்தை பாகுபாடாக நடைமுறைப்படுத்த முனைவதை அவதானிக்க முடிகிறறது.
மேலும் அரசாங்கத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் “விமல் வீரவன்சவின் உடல் நிலை பாதிக்கப்பட்டால் அவரை மயானத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்” எனக்கு குறிப்பிடுகின்றனர். இருந்தபோதிலும் அரசாங்கம் இவ்வாறாக தனது நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றால் விமல் வீரவன்சவை மாத்திரமல்ல, முழு நாட்டையும் மயானத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உருவாகும். ஆகவே இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்தும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
அரசாங்கம் அண்மைக்காலமாக முன்னெடுத்துச்செல்லும் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவகாசம் கோரியுள்ளோம். அதற்கான அவகாசம் கிடைக்கும் என்றார்.