நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை பிணையில் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தும் மகஜர் ஒன்றில் கையெழுத்திட நாட்டின் முன்னணி பிக்குகளில் ஒருவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரைப் பிணையில் விடுதலை செய்ய வலியுறுத்தும் வகையில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை வலியுறுத்தும் மகஜர் ஒன்றை அவரது சகாக்கள் தயாரித்துள்ளனர். இதற்காக நாட்டின் முன்னணி பிக்குமார்களின் கையெழுத்தைப் பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பௌத்த மதத்தின் நான்கு நிகாயக்களில் ஒன்றின் பிரதம தேரரும், நாட்டில் பரவலாக அறியப்பட்டவருமான ஒரு பௌத்த பிக்குவிடம் குறித்த மகஜரில் கையெழுத்திடுமாறு கோரி நேற்றைய தினம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு குறித்த பௌத்த பிக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். ஏனைய மூன்று பௌத்த பிக்குகளும் கையெழுத்திட்டால் தானும் கையெழுத்திடுவது குறித்து பரிசீலிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களின் பாதுகாவலனாக விமல் வீரவங்சவை அடையாளப்படுத்தி, அதன் ஊடாக அவரது விடுதலை தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் அவரது சகாக்களின் முயற்சி ஆரம்ப கட்டத்திலேயே தோல்வியைத் தழுவியுள்ளது.