பெரும்பாலான வயதானோரிடம் இரவில் சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழும் பழக்கம் உண்டு. இதனை நாக்டுரியா என அழைப்பர். இதனால் இரவில் தூக்கம் கெடுவதால் மன அழுத்தம், உடல் சோர்வு மற்றும் சகிப்பு தன்மையற்ற நிலையானது ஏற்படுகிறது.
லண்டனில் நடைப்பெற்ற ஐரோப்பிய சிறுநீரகவியல் கூட்டமைப்பு கூட்டத்தில், நாகசாகி பல்கலை கழகத்தின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் அதிகமாக உப்பினை எடுத்து கொள்பவர்களின் உணவில் உப்பின் அளவினை குறைக்க சொல்லி வலியுறுத்தியுள்ளனர்.
இதன் மூலம் அவர்கள் இரவில் சராசரியாக இருமுறை சிறுநீர் கழிக்கும் பழக்கமானது ஒருமுறையாக குறைந்தது. பகலில் சிறுநீர் கழித்தலிலும் மாறுதல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
பொதுவாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கத்திற்கு காரணம் உப்பின் அளவு மட்டும் காரணமல்ல என பிரிஸ்டல் பல்கலைகழகத்தினை சேர்ந்த நாக்டுரிய நிபுணர் பேராசிரியர் மார்கஸ் டிரேக் கூறியுள்ளார்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இரவில் குடிக்கும் நீரின் அளவு, சிறுநீர்ப்பை மற்றும் ஆண்களில் புரோஸ்டேட் சுரப்பியின் பிரச்சனை போன்றவற்றினை குறித்தும் மருத்துவர்கள் அறிந்து சிகிச்சை அளிப்பர் எனவும் அவர் கூறியுள்ளார்.
வயதான காலத்தில் ஏற்படும் ஹார்மோன் பிரச்சனைகளாலும், ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி பெரிதாவதாலும் இத்தகைய பிரச்சனை எழுகிறது என அவ்வாய்வின் முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உப்பின் அளவு மட்டுமே இதற்கான காரணமல்ல. மற்ற உடலியல் பிரச்சனைகளான நீரிழிவு, இதய கோளாறு மற்றும் உறங்கும் போது ஏற்படும் மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகளும் இதற்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
1-3 வயதினாலான குழந்தைகள் 2கிராமிற்கும் குறைவான அளவு உப்பினையும், 7-10 வயதிலான குழந்தைகள் 5கிராமிற்கும் குறைவான அளவு உப்பினை எடுத்து கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
11 வயதிற்கு அதிகமானவர்கள் 6கிராம் வரை உப்பினை தங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
ரொட்டி மற்றும் காலை உணவு தானியங்களில் நாம் நினைப்பதற்கும் அதிகமான அளவு உப்பானது இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இத்தகைய உணவுகளை குறைத்து கொள்ள வேண்டியது அவசியம்.