முதல்வராகும் தமது ஆசையை சசிகலா வெளிப்படுத்திய பின்னரே பிரச்சினை ஏற்பட்டது என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து பேசியபோதே பன்னீர் செல்வம் மேற்படி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சியில் குழப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே அ.தி.முக பொதுச் செயலாளராக சசிகலா தெரிவு செய்யப்பட்டதாகவும் அதற்கான முன்மொழிவை வெளியிடுவதற்கு தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற தனது கோரிக்கை சசிகலா தரப்பில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து மருத்துவமனை தெரிவித்த தகவல்களை தாம் நம்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.