நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவரும் தாம் பெற்றுக்கொள்ள வேண்டிய ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் தொடர்பிலான அறிவிப்பை பிரதமர் விரைவில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அடிப்படைச் சம்பளம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்,
அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் மக்களுக்கு பிரதமர் அந்த அறிவிப்பை முன்வைப்பார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமன்றி பொதுவாக அனைத்து ஊழியர்களுக்கும் நடைமுறைக்கு வரும் வகையிலேயே ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் பற்றிய அறிவிப்பு முன்வைக்கப்படும்.
சுவீடன் நாட்டில் நாளொன்றுக்கு கட்டாயம் வேலை செய்ய வேண்டிய நேரம் 06 மணித்தியாலங்களாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்காக அவர்களின் வழமையான சம்பளத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
ஆகவே, இலங்கை பிரஜைகளுக்கும் ஆகக் குறைந்த அடிப்படைச் சம்பளம் அறிமுகம் செய்து வைக்கப்பட வேண்டுமென்பதே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விருப்பமாகும்.
அந்தவகையில் அடிப்படைச் சம்பளம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் மக்களுக்கு பிரதமர் அந்த அறிவிப்பை முன்வைப்பார் என அமைச்சர் கபிர் ஹாசிம் மேலும் தெரிவித்துள்ளார்.