நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்த கேள்வியொன்றுக்கு மகாபாரதத்தை மேற்கோள் காட்டி பதில் அளித்து இருந்தார். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்துக்களின் கலாசாரத்தை அவர் கொச்சைப்படுத்தி இருப்பதாகவும் குற்றம்சாட்டின.
கமல்ஹாசன் மீது வள்ளியூர், கும்பகோணம் கோர்ட்டுகளில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. பெங்களூருவிலும் பிரணவந்தா என்ற சாமியார் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.
“மகாபாரதம் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்ததாக உங்கள் தந்தை கமல்ஹாசன் மீது கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்படுகிறதே?” என்று ஐதராபாத் வந்த கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான அக்ஷராஹாசனிடம் நிருபர்கள் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்து அக்ஷராஹாசன் கூறியதாவது:-
“எனது தந்தை எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் அதுகுறித்து நிறைய யோசிப்பார். ஆழமாக சிந்திப்பார். அதன்பிறகுதான் தனது கருத்தை வெளியிடுவார். வரலாற்றை திரும்பி பார்த்தால் அவரது வாழ்க்கை பயணத்தில் இதுபோல் நிறைய சர்ச்சைகளை அவர் சந்தித்து இருக்கிறார்.
எனது தந்தை நடிப்பில் ‘சபாஷ்நாயுடு’ படம் தற்போது தயாராகி வருகிறது. இதில் எனது அக்கா சுருதிஹாசனும் நடிக்கிறார். இந்த படத்தில் எனக்கும் நடிக்க ஆர்வம் இருக்கிறது. கதைக்கு தேவைப்பட்டால் நானும் நடிப்பேன். அஜித்குமாருடன் விவேகம் படத்தில் நடித்து வருகிறேன். இது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது. இந்தி படமொன்றில் திருமணத்துக்கு முன்பு கர்ப்பமாகும் பெண் வேடத்தில் நடிக்கிறேன். இது ஒரு விழிப்புணர்வு படமாக இருக்கும்”.
இவ்வாறு அக்ஷராஹாசன் கூறினார்.