கேதார கவுரி விரதத்தை புரட்டாசி மாதம் வளர்பிறையில் வரும் அஷ்டமி திதியில் தொடங்கி, தீபாவளி அமாவாசை வரும் வரையில் 21 நாட்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஒன்றாக இழைத்து நூற்கப்பட்ட சரடை (நூல்), 21 இழைகள் கொண்டதாக எடுத்து, வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்ற பிரார்த் தனையுடன் பெண்கள் இடது கையிலும், ஆண்கள் வலது கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும். புண்ணிய நதியில் நீராடிவிட்டு சிவன் கோவிலுக்கு சென்று வழிபடவேண்டும். சூரியன் மறைந்தபின் ஒருவேளை மட்டும் உணவு உண்ணவேண்டும். இரவில் படுக்கையில் படுக்காமல் தரையில் படுத்து உறங்க வேண்டும்.
பூஜையறையில் விளக்கேற்றி சிவபெருமான் அல்லது சிவபார்வதி படத்துக்கு முன்னால் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். சிவமந்திரம், அம்மன் பாடல்களை பாட வேண்டும். 21 தேங்காய், 21 மஞ்சள் உருண்டை, 21 விபூதி உருண்டை ஆகியவற்றை வைத்து தீப, தூபம் காட்டி, நைவேத்தியங்களை சமர்ப்பித்து பயபக்தியுடன் வணங்க வேண்டும்.
இப்படி விரதம் இருந்து தேய்பிறை சதுர்த்தியன்று கோவிலுக்கு சென்று ஏதாவது ஒரு இடத்தை (தியான மண்டபம், யாக மண்டபம்) தேர்ந்தெடுத்து அங்கு ஒரு மரக்கால் அளவு செந்நெல்லை சதுரமாக பரப்பி வைக்க வேண்டும்.
அதன் நடுவே ‘ஓம்’ என்ற பிரணவ எழுத்தை எழுதி, அதன் மீது ஒரு கலசத்தில் மாவிலைகளை செருகி, செம்புக்குள் நல்ல சுத்தமான நீர் விட்டு, கலசத்தின் மீது மஞ்சள் தடவி, தேங்காயை வைத்து முறைப்படி சிவபெருமானை எழுந்தருளும்படி பிரார்த்திக்க வேண்டும். பிறகு முறையாக பூஜை செய்து துதிப்பாடல்கள் பாடி வணங்கவேண்டும். பூஜைக்கு மறுநாள் முன்பு கையில் கட்டிய சரடை அவிழ்த்துவிட்டு பரமேஸ்வரனை வணங்கவேண்டும்.
பரமேஸ்வரனின் இடப்பாகம் பெற்ற பார்வதிதேவி, ‘நான் கடைப்பிடித்த இந்த கேதார கவுரி விரதத்தை, யார் மேற்கொண்டாலும், அவர்களுக்கு சகல செல்வங்களையும், முக்திப்பேற்றினையும் வழங்கவேண்டும்’ என சிவனிடம் வேண்டிக்கொண்டார். அதன் படியே பரமேஸ்வரனும் வரம் தந்தார்.
பலன்கள் :
பெண்கள் கேதார கவுரி விரதத்தை இடைவிடாமல் 21 நாட்கள் பக்தியுடன் கடைப்பிடித்து வந்தால், சகல ஐஸ்வரியங்களையும் பெறுவர். தீர்க்க சுமங்கலியாக வாழ்வர். இழந்த பொருள் கிடைக்கும். குழந்தை பாக்கியம், தன, தானிய சம்பத்துகள் உண்டாகும். கணவன்–மனைவி ஒற்றுமையும், குடும்ப சுக நலன் களும் ஏற்படும்.