ரஜினிகாந்த், தனது படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் ரசிகர்களை சென்னைக்கு அழைத்து சந்தித்து பேசுவது வழக்கம். அப்போது, ரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொள்வார். ஆனால், கடந்த 10 வருடங்களாக இந்த கூட்டங்கள் நடைபெறவில்லை.
ஆனாலும், தனது பிறந்த நாளில் சென்னை போயஸ்கார்டனில் உள்ள வீட்டின் முன்னால் திரளும் ரசிகர்களை பார்த்து வணக்கம் தெரிவித்து செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார் ரஜினி. தங்களை அழைத்து பேசும்படி ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியும் அது ஏற்கப்படாமலே இருந்தது. ஆனால் தற்போது புதிய திருப்பமாக ரசிகர்மன்ற ஆலோசனை கூட்டத்தை கூட்ட ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளதாகவும், வருகிற 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை கோடம்பாகத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி நிர்வாகிகளை சந்திப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், தற்போது குறிப்பிட்ட தேதியில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் ராகவேந்திரா மண்டபத்தில் கூடுவது உறுதியாக இருந்தாலும், ரஜினி இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார் என்றே கூறப்படுகிறது. ரசிகர் மன்ற நிர்வாகிகள் மட்டுமே கூடி சில முடிவுகளை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், அது ரஜினியின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என்றும் கூறப்படுகிறது.