திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று முன்னோர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள், ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்பதற்காக, ‘உள்ளூரில் பணம் சம்பாதிக்க முடியாமல் போனால், கடல் கடந்து வெளிநாடு சென்றாவது பணத்தைச் சம்பாதி’ என்பதுதான்.
ஆனால், எல்லோருக்குமே வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்கும் யோகம் இருப்பதில்லை. ஒருவர் வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்கவேண்டும் என்றால், அதற்கு உரிய ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி ஜோதிட நிபுணர் ஞானரதம் அவர்களிடம் கேட்டோம்.
”வெளிநாடு செல்வதற்கு உயர்கல்விப் படிப்புதான் அவசியம் வேண்டும் என்பதில்லை. ஒரு சிலர் பள்ளிப் படிப்பு மட்டுமே படித்த நிலையிலும், வெளிநாடு சென்று பொருளீட்டுகிறார்கள். ஒரு சிலருக்கு நன்றாகப் படித்தும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
இதற்குக் காரணம் அவர்களின் ஜாதகத்தில் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகம் இல்லாமல் இருப்பதுதான். ஒருவருக்கு வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகம் இருக்கிறதா என்று அவருடைய ஜாதகத்தைப் பார்த்துத் தெரிந்துகொண்டபிறகே முடிவு எடுக்கவேண்டும்.
ஒருவர் உள்ளுரிலேயே சம்பாதிப்பாரா அல்லது வெளியூர் சென்று சம்பாதிப்பாரா அல்லது வெளிநாடு சென்று சம்பாதிப்பாரா என்பதை ஜாதக அமைப்பைக்கொண்டு கண்டறியலாம்.
ஒருவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு பணம் சம்பாதிக்கவேண்டும் என்றால், அவருடைய ஜாதகத்தில் நீர் கிரகங்களான சந்திரன், சுக்கிரன் ஆகியோர் வீரிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 3-ம் இடத்துடனும், பாக்கியஸ்தானம் என்று சொல்லக்கூடிய 9-ம் இடத்துடனும் மற்றும் அயன சயன போக ஸ்தானமான 12-ம் ஸ்தானத்துடனும் தொடர்பு கொண்டதாக இருக்கவேண்டும். இப்படிப்பட்ட அமைப்புகள்தான் தொலைதூரப் பயணம் செல்ல காரணமாகிறது.
வெளிநாடு செல்ல காரணங்கள்
அனைவரும் வேலைக்காக மட்டும்தான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்கள் என்றால், இல்லை என்றே சொல்லலாம். உதாரணமாக ஒரு சிலர் மேற்படிப்புக்காகச் செல்கிறார்கள். ஒரு சிலர் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டு வெளிநாடு செல்கிறார்கள். ஒரு சிலர் திருமணத்துக்குப் பிறகு கணவனது வேலை காரணமாகச் செல்கிறார்கள். இதற்கு அவர்களின் ஜாதக அமைப்பே காரணமாகும்.
வெளிநாட்டு வாசம் எவ்வளவு காலம்?
சிலருக்கு வெளி நாடு செல்லும் யோகம் இருந்தாலும், அவர்கள் நிரந்தரமாகக் குடியுரிமை வாங்க முடியாது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டும் தங்கி விட்டு, மீண்டும் தன் தாய் நாட்டுக்கே வந்து விடுகிறார்கள். ஒரு சிலர் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி குடியுரிமையையும் வாங்கி விடுகிறார்கள். இதெல்லாம் ஜாதகத்தில் யோகம் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
எந்தெந்த ராசிக்காரர்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்கள்?
பொதுவாக, ஜோதிட விதிப்படி மேஷம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம், மீனம் இந்த ராசிக்காரர்கள் பெரும்பான்மையாக வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்வதைப் பார்க்கலாம். ஆனால், மற்ற ராசிக்காரர்கள் செல்ல முடியாதா என்ற கேள்வி நமக்குத் தோன்றும். மற்ற ராசிக்காரர்களின் ஜாதகத்தை மேலோட்டமாக பார்த்துவிட்டு, அவர்கள் செல்ல முடியாது என்று சொல்லக்கூடாது.
மேலும், மேற்கூறிய ராசிகளில் பிறந்தாலும், வெளிநாடு செல்ல முடியாதவர்களையும் நான் பார்த்திருக்கின்றேன். அதற்குத்தான் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள காரணமாக இருக்கும் கிரகங்களான சந்திரனின் நிலை, சனியின் நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
தொலைதூரப் பயணம் செல்லக் காரணமான ஒன்பதாம் இடம், பன்னிரண்டாம் இடம், இவ்விடங்களைப் பார்க்கும் கிரகம், இவ்விடங்களில் இருக்கும் கிரகம், இவ்விடங்களில் இணையும் கிரகம், மற்றும் லக்னாதிபதியின் நிலை ஆகியவற்றை கவனிக்க வேண்டும். மேலும் அப்போது நடைபெறும் தசா புக்தியின் நிலை போன்றவற்றையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும்.