இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடந்த 4 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரில் மிகுந்த சர்ச்சை ஏற்பட்டது. டி.ஆர்.எஸ். விவகாரம், புத்தி கூர்மையின்மை, அமெரிக்க அதிபர் டிரம்புடன் கோலியை ஒப்பிட்டது, முரளி விஜய்யை சுமித் வசைபாடியது, கோலியின் காயத்தை மேக்ஸ்வெல் நையாண்டி செய்தல் உள்பட பல்வேறு சர்ச்சைகள் நிகழ்ந்தன.
இந்த தொடர் முடிந்த பிறகு பேட்டி அளித்த விராட் கோலி, “ஆஸ்திரேலிய வீரர்களுடனான நட்பு மீட்க முடியாத அளவுக்கு இந்த தொடரில் சேதம் அடைந்து விட்டது. இனி அவர்கள் நண்பர்கள் இல்லை” என்று தெரிவித்தார்.
விராட் கோலியின் இந்த கருத்துக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
மார்க் டெய்லர் (ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்):- கிரிக்கெட் வீரர்கள் ஒன்றிணைந்து நீண்ட நாட்கள் ஆடுவார்கள். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக விளையாடுவார்கள். அப்போது மிகவும் கவனமாக இருப்பது முக்கியம்.
ஆஸ்திரேலியர்கள் இனி நண்பர்கள் இல்லை என்று விராட் கோலி கூறி இருப்பது கண்டனத்துக்குரியது. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. காழ்ப்புணர்ச்சியை மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது.
என்னை பொறுத்தவரை நான் எப்போதும் போட்டி முடிந்த பிறகு எதிர் அணியுடன் சுமூகமான உறவை தான் வைத்துள்ளேன்.
டீன் ஜோன்ஸ் (ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்):- கிரிக்கெட் ஒரு மிக சிறந்த விளையாட்டு. வெற்றியையோ, தோல்வியையோ பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. விராட் கோலி இதை கற்றுக் கொள்ள வேண்டும்.
கிரிக்கெட் விளையாடுவதே எல்லோரும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதற்குதான் என்பதை கோலி புரிந்து கொள்ள வேண்டும்.
டேவிட் லாயிட் (இங்கிலாந்து முன்னாள் வீரர்):- ஆடுகளத்துக்கு வெளியே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெண்டுல்கரிடம் இருந்து விராட் கோலி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
லீமேன் (ஆஸ்திரேலிய பயிற்சியாளர்):- விராட் கோலியின் கருத்து மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அது அவரது கருத்து இல்லையா? ஒட்டு மொத்த இந்திய அணியின் கருத்தாக இது இருக்கும் என்று கருதவில்லை. தரம்சாலா டெஸ்டில் ரகானே கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டார்.