Loading...
செல்போனில் வந்த தவறான குறுத்தகவலால் ரூ. 90 லட்சத்துக்கு ஆசைப்பட்டு ரூ. 20 லட்சத்தை ராமநாதபுரம் ஆசிரியை இழந்தார். இது தொடர்பாக தொண்டியை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
செல்போனில் வந்த குறுந்தகவலால் ரூ. 90 லட்சத்துக்கு ஆசைப்பட்டு ரூ. 20 லட்சத்தை இழந்த ஆசிரியை ராமநாதபுரம்: ராமநாதபுரம் வசந்தா நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). பரமக்குடி ரெயில் நிலையத்தில் கிளார்க்காக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. ஆசிரியையாக உள்ளார். சம்பவத்தன்று இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வந்தது. அதில் உங்களுக்கு ரூ. 90 லட்சம் பரிசு விழுந்துள்ளது. அதை வாங்க வேண்டும் என்றால் ரூ. 20 லட்சத்தை முன்பணமாக செலுத்துமாறு கூறப்பட்டு இருந்தது.
இதை உண்மை என்று நம்பிய ஜெயந்தி குறுந்தகவல் வந்த செல்போன் எண்மூலம் தெரிவித்த வங்கிகணக்குக்கு ராமநாதபுரம் வங்கி மூலம் 27 தவணைகளில் ரூ.19 லட்சத்து 33 ஆயிரத்து 620-ஐ செலுத்தினார். அதன்பின்னர் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அது கிடைக்கவில்லை. அப்போதுதான் ஆசிரியை ஜெயந்திக்கு, தான் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆசிரியையின் கணவர் கண்ணன், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் புகார் செய்தார்.
அவரது உத்தரவின் பேரில், தொண்டியை சேர்ந்த மகிமா, சோனாலி, அனிபா சர்மா, ஜான்மார்ட்டின் ஆகிய 4 பேர் மீது, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Loading...