வைர விழா கண்ட தமிழக சட்டசபையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் எம்.எல்.ஏ.வாகி இன்று வைர விழா காண்கிறார்.
தமிழக அரசியல் வரலாற்றில் மிக மூத்த அரசியல்வாதி. அரசியல் மட்டுமின்றி கலை, இலக்கியம், எழுத்தாற்றல், பேச்சாற்றல் என்று பல துறைகளிலும் முத்திரை பதித்தவர்.
1924 ஜூன் 3-ல் திருக்குவளையில் பிறந்து தனது 14 வயதிலேயே நீதிக்கட்சியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்குள் நுழைந்தார்.
93 வயதாகும் கருணாநிதி 1957-ல் குளித்தலையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அது முதல் தொடர் வெற்றிகளையே ருசித்துள்ளார்.
3-வது 4-வது, 10-வது, 12-வது, 14-வது முதல்-அமைச்சராக 5 முறை தமிழக அரசவையை அலங்கரித்தவர்.
முதல் முதலில் குளித்தலையில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று 1957 ஏப்ரல் 1-ந்தேதி பதவி ஏற்றார்.
அதன் பிறகு 1962-ல் தஞ்சாவூர், 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977, 1980-ல் அண்ணாநகர், 1989, 1991-ல் துறைமுகம், 1996, 2001, 2006-ல் சேப்பாக்கம், 2011, 2016 தேர்தல்களில் திருவாரூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
தொடர்ந்து போட்டியிட்ட 13 முறையும் வெற்றி பெற்றே வந்துள்ளார். 1991 தேர்தலில் அவர் மட்டுமே வெற்றி பெற்றதால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.எல்.ஏ., 2 ஆண்டுகள் பொதுப்பணித்துறை அமைச்சர், 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவி என்று தமிழக சட்டமன்ற வரலாற்றில் தனி இடத்தை பிடித்துள்ளார்.