நடிகர் சங்க கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா சங்க வளாகத்தில் இன்று காலை நடந்தது. நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், நடிகர்கள் விஜயகுமார், மனோபாலா, பூச்சி முருகன் உட்பட பல நடிகர், நடிகைகள் இதில் கலந்துகொண்டனர்.
கடந்த முறை நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர் உள்ளார். தேர்தல் வாக்குறுதியில், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டியே தீருவோம் என கூறியிருந்தார். அதன்படி நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று காலை போடப்பட்டது. இதில் நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால், தலைவர் நாசர் உள்ளிட்ட மூத்த நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி படப்பிடிப்பில் இருப்பதால் அவர் பங்கேற்கவில்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் இன்னும் சற்று நேரத்தில் இதில் பங்கேற்க உள்ளனர்.