மரியாள் என்ற ஒரு சகோதரி இருந்தாள். அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்’ (லூக்கா 10:39).
எருசலேமிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் பெத்தானியா கிராமத்தில் குஷ்டரோகியாக இருந்த சீமோன், குடும்பமாக இறைவனை நேசித்தான். அவனுடைய குஷ்டரோகத்தை குணமாக்கினார். அவனுக்கு மார்த்தாள், மரியாள், லாசரு என்ற பிள்ளைகள் இயேசுவினிடத்தில் மிகுந்த அன்புகூர்ந்த காரணத்தால் அந்த வீட்டில் இயேசு பிரவேசித்தார்.
‘மரியாள்’ என்றால் ‘கண்ணீர்’ என்று அர்த்தம். மரியாள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து தேவனுடைய வசனத்தை கேட்டாள். மார்த்தாளோ அநேக வேலைகளை செய்து மிகவும் வருத்தமடைந்து, ‘ஆண்டவரே நான் தனிமையில் வேலை செய்கிறேன். என் சகோதரியை அனுப்பும்’ என்றாள்.
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக ‘மார்த்தாளே நீ அநேக காரியங்களைக் குறித்து கவலைப்படுகிறாய். தேவையானது ஒன்றே. மரியாள் தன்னை விட்டுவிடாத நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள்’ என்றார்.
மரியாள் ஆண்டவரின் பாதத்தை பற்றிக்கொண்டு தேவ காரியங்களை தெரிந்து கொண்டாள்.
நாம் முழுக்குடும்பமாக தேவனை நேசிக்கும்போது தேவ ஆசீர்வாதங்களை பெறுகின்றோம். தேவனும் நமது குடும்பத்தையும் நேசிக்கிறார்.
‘கர்த்தருக்குப் பரிமள தைலம் பூசி தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே’. (யோவா.11:2)
இயேசுவுக்கும் சீடர்களுக்கும் சீமோன் வீட்டில் இரவு விருந்து அளித்தனர். மார்த்தாள் பணிவிடை செய்தாள். மரியாள் விலையேறப்பெற்ற பரிமள தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றி பாதங்களில் பூசி தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள். மிகுந்த பணிவும் அன்பும், மரியாதையும் செலுத்தினாள்.
மரியாள் தன்னை மிகவும் தாழ்த்தி ஆண்டவருக்கு அடிமையென்பதை வெளிப்படுத்தினாள். அந்த வீடு முழுவதும் பரிமள தைலத்தின் வாசனையினால் நிறைந்து இருந்தது.
இயேசு சொன்னார்: ‘மரியாள் என்னிடத்தில் நற்கிரியைகளைச் செய்திருக்கிறாள். இந்த தைலத்தை என் சரீரத்தின் மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செயல். என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள். மரியாளின் நற்குணங்கள் இறைவனின் இருதயத்திற்கு ஏற்றதாக இருந்தது. நாமும் ஆண்டவருக்கு பிரியமான காரியங்களை செய்யும்போது தேவனே நமக்கு சாட்சியாக இருப்பார்’.
‘பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான்’ (யோவா.11:1).
தன் சகோதரன் லாசரு வியாதிப்பட்டவுடன் மார்த்தாள், மரியாள் இயேசுவுக்கு தகவல் தெரிவித்தார்கள். இயேசு, மார்த்தாள், மரியாள், லாசருவினிடத்தில் மிகுந்த அன்பாக இருந்தார். இயேசு வர காலதாமதம் ஆனபோது லாசரு மரித்துப்போனான். குகை போன்ற ஒரு கல்லறையில் வைக்கப்பட்டு அதன்மேல் ஒரு கல்லை வைத்தார்கள்.
நாலு நாளான பின்பு பெத்தானியா கிராமத்திற்கு இயேசு வந்தார். மார்த்தாள், மரியாள் இருவரும் இயேசுவின் பாதத்தில் விழுந்து ‘ஆண்டவரே நீர் இங்கே இருந்தீரேயானால் என் சகோதரன் மரிக்க மாட்டான்’ என்று கண்ணீர் விட்டு கூறினார்கள். தேவன்மீது அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்தை இது வெளிப்படுத்துகிறது.
மார்த்தாள், மரியாள் அழுகிறதையும் அவர்களோடு இருந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கி துயரமடைந்து இயேசு கண்ணீர் விட்டார். அவர்கள்மேல் வைத்த அன்பை வெளிப்படுத்தினார். ‘அவனை எங்கே வைத்தீர்கள்?’ என்று கேட்டு கல்லறையினிடத்திற்கு வந்தார். கல்லறையின் மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. கல்லை எடுத்துப் போடுங்கள் என்றார்.
மார்த்தாள், ‘ஆண்டவரே இப்பொழுது நாறுமே நாலு நாளாயிற்றே’ என்றாள்.
இயேசு, ‘நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்’ என்று சொல்லி, ‘பிதாவே நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்’ என்று கூறினார். பின்னர் ‘லாசருவே வெளியே வா’ என்று உரத்த சத்தமாய் கூப்பிட்டார். மரித்தவன் உயிரோடு வெளியே வந்தான். அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.
லாசருவின் சரீரம் துணியினால் கட்டப்பட்டு இருந்தது. ‘இவனை கட்டவிழ்த்து விடுங்கள்’ என்றார். கட்டவிழ்த்த போது புது மனுஷனாக இருந்தான். அனைவரும் அவரை விசுவாசித்தார்கள். பிரதான ஆசாரியரும், பரிசேயரும், ஆலோசனை சங்கத்தாரும் ‘இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறார். உலகமே அவருக்கு பின் செல்கிறது’ என்றார்கள்.
மரியாள் இயேசுவின் பாதத்தைப் பற்றிக் கொண்டாள். தேவ வார்த்தையைக் கேட்டாள். விசுவாசம் வைத்தாள், அன்பு கூர்ந்தாள், தேவனை தேடினாள், மரித்து போன தன் சகோதரனை உயிருடன் மீட்டுக்கொண்டாள்.
அவர் பூமியிலிருந்த போது எல்லோருக்கும் நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்தார். அதைப்போல அற்புதங்களும், அதிசயங்களும் உலகம் முழுவதும் இன்றும் செய்து கொண்டிருக்கிறார்.
நாம் இறைவனின் பாதத்தைப் பற்றிக்கொண்டால் சந்தோஷம், சமாதானம், விடுதலை, ஜெயத்தை பெற்றுக் கொள்ளலாம், ஆமென்.