சென்னை: காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் விலகியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்சின் தடைக்கு பிறகு, புனே சூப்பர்ஜியான்ட் அணிக்காக அஸ்வின் ஆடிவந்த நிலையில், இந்த வருடம் ஐபிஎல் தொடர் முழுக்க அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
sports hernia எனப்படும் காயத்தால் அஸ்வின் அவதிப்படுவதால் அவருக்கு ஆறு வாரங்களாவது ஓய்வு தேவைப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ச்சியாக அஸ்வின் ஆடி வருவதால் இந்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜூன் மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபியில் அஸ்வின் பங்கேற்க வாய்ப்புள்ளது. புனே அணி கேப்டன் பொறுப்பை டோணி துறந்துவிட்ட நிலையில் அதற்கு பதிலாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அந்த அணிக்கு தலைமை வகிக்க உள்ளார்.
டோணி அந்த அணியில் ஒரு வீரராக ஆட உள்ளார்.
இதுகுறித்து ஸ்மித் கருத்து தெரிவிக்கையில், டோணிக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. நட்போடு ஆடுவோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.