கம்பஹா இம்புல்கொடை பிரதேசத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இரண்டு செயற்பாட்டாளர்கள் இறந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் பற்றிய அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையின் போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர், மேலதிக நீதவான் லலித் கன்னங்கரவிற்கு இதனை அறிவித்துள்ளனர்.
இந்த மரணங்கள் நடந்து மூன்றரை ஆண்டுகள் கடந்துள்ளதால், விசாரணைகளை துரிதமாக நடத்துமாறு புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடுமாறு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ராஜிகா சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனடிப்படையில், அடுத்த வழக்கு தினத்தில் மேலதிக அறிக்கை தாக்கல் செய்யுமாறு புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்ட நீதவான், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் முன்னெடுத்து வந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பேரணி ஒன்றை நடத்தியது.
கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி நடந்த இந்த பேரணியின் போது துண்டுப்பிரசுரங்களை எடுத்து வர நுகேகொடை தெல்கந்த பிரதேசத்திற்கு சென்றுக்கொண்டிருந்த போது இந்த மாணவர்கள் உயிரிழந்தனர்.
களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் ஜனக்க பண்டார ஏக்காநாயக்க, உருகுணை பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் சிசித பிரியங்கர சில்வா ஆகிய இரண்டு பேரே உயிரிழந்தனர்.
இவர்கள் விபத்தில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் அவர்கள் தாக்கப்பட்டே கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது.