சிவசக்தி புரோடக்ஷன் கம்பெனி தயாரிப்பில் நடிகர் பிரபுதேவா, லட்சுமிமேனன் நடிக்கும் `யங்மங்சங்’ என்ற சினிமா படப்பிடிப்பு கடந்த 15 நாட்களாக கும்பகோணம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்கும் துணை நடிகர்கள் கும்பகோணத்தில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தனர். இன்று காலை திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து இருந்தனர்.
இதற்காக 10 வேன்களில் 100-க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் வேனில் சென்றனர். அவர்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் எடுத்து சென்றனர்.
இதில் ஒரு வேன் இன்று காலை 6 மணியளவில் கும்பகோணம் – திருவையாறு சாலையில் பாபநாசம் அருகே உள்ள கருப்பூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.
அப்போது பெரம்பலூரில் இருந்து கும்பகோணத்திற்கு ஜல்லி ஏற்றி வந்த லாரி வேன் மீது மோதியது. இதில் வேன் நொறுங்கியது. அதில் இருந்த சென்னையை சேர்ந்த துணை நடிகர் ஆறுமுகம், வேன் டிரைவர் கும்பகோணம் சாக்கோட்டையை சேர்ந்த விஜி ஆகியோர் உடல் நசுங்கி பலியானார்கள்.
துணை நடிகர்கள் செல்லப்பா, ராமமூர்த்தி, மோகன், பாப்பாத்தி அம்மாள் உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
லாரியை ஓட்டி வந்த பெரம்பலூரை சேர்ந்த சுரேஷ். தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.