கடவுள், எந்நாளும் பேரன்பு, பெரும் கருணை மிக்கவர். நீ குணம் பெற விரும்புகிறாயா? பாவ வாழ்வில் இருந்து விடுபட விரும்புகிறாயா? மகிழ்ச்சியாக வாழ ஆசையா? அமைதியான உள்ளம் வேண்டுமா? இவைகள் யாவும் ஒவ்வொரு நாளும் இறைவன் நம்மை பார்த்து கேட்கும் கேள்விகளாக அமைகின்றன.
நாம் மகிழ்ச்சியாக வாழத்தான் இறைவன் விரும்புகிறார். நாம், உடனடியாக ‘ஆம்‘ என்று பதிலளிப்பதற்கு பதிலாக இப்போது வேண்டாம் என நினைக்கின்றோம். அதற்கு காரணம், வலிகளோடும், வேதனைகளோடும் வாழ பழகி விட்டோம். இதிலிருந்து விடுபட வேண்டும், இயேசுவால் தொடப்பட வேண்டும் எனில், நாம் பல சவால்களை சந்தித்தாக வேண்டும்.
இது ஒரு அழைப்பு. நேர்மையான, உண்மையான, ஒழுக்கமான, உன்னதமான வாழ்வை வாழ வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுவோம். “கேளுங்கள் கொடுக்கப்படும்“ என்ற இறைவன், கொடுத்தபின் நிலை வாழ்வு வாழ நம்மை அழைக்கிறார். ‘கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை’ என்ற பழமொழி போல் போகிறபோக்கில் இறைவனின் ஆசீரும் வேண்டும், நம் மனம் போன போக்கில் விரும்பியபடி வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எவ்வாறு ஒரு ஊழியன் இரு தலைவர்களுக்கு ஊழியம் புரிய முடியும்?
“இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்” (எசாயா 65:17) என்று இறைவன் புதியன விரும்புகிறார். ஆனால் நாமோ பழைய அழுக்கான, பாவமான, துன்பமான, கண்ணீரோடு வாழத்தான் ஆசைப்படுகிறோம். இயேசுவின் வாழ்வையும், வார்த்தைகளையும் நம்பி அவராக வாழ அழைக்கப்படுகிறோம்.
புதிய உலகம் படைக்க சக்தி பெறுகிறோம். ஆனால் நம் பலவீனத்தால் மீண்டும், மீண்டும் நம்மை நாமே வீழ்த்தி குறைவில் நிறைவு காண்கின்றோம். இறைவன் கொடுத்த வாழ்வை புதுமையோடு, புனிதத்தன்மையோடு நிறை மனித வாழ்வால் வாழ முயற்சிப்போம். தவக்காலத்தை கொண்டாடுவோம். புதிய கிறிஸ்துவாக மாறுவோம்.
அருட்பணி. ஜோ, சலேசியன் சபை, உதவிப்பங்குத்தந்தை, சவேரியார் பாளையம் பங்கு.