கீரை வகைகள் ஒவ்வொன்றுமே மகத்துவம் மிக்கவை. அதிலும் முருங்கைக் கீரை, பல ஆரோக்கிய நலன்களை அள்ளி வழங்க வல்லது.
முருங்கைக் கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, சி, பீட்டா கரோட்டீன், மாங்கனீஸ், புரதம் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்திருக்கின்றன.
எனவே, வாரம் ஒருமுறை முருங்கைக் கீரை மட்டுமின்றி, அதனுடைய பூ மற்றும் காயையும் சமைத்துச் சாப்பிட்டால் ஏராளமான மருத்துவ நன்மைகளைப் பெறலாம்.
முருங்கைக்கீரையை தினமும் உட்கொண்டுவந்தால், ரத்தசோகை, சருமப் பிரச்சினை, சுவாசப்பாதை, செரிமான மண்டலப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
முருங்கைக் கீரை சாப்பிடுவதால், அது மாதவிடாய் சுழற்சியைச் சீராக்கி, பெண்கள் கர்ப்பத்தில் வளரும் குழந்தையின் உடலில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுக்கும்.
முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், அது கண் பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுத்து, கூர்மையான கண் பார்வையை ஏற்படுத்தி, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முருங்கைக் கீரையை வாரந்தோறும் உணவில் சேர்த்துவந்தால், அது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, எளிதில் உடலைத் தொற்றும் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்கும்.
முருங்கைக் கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதுடன், மாரடைப்பு போன்ற இதர இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது.
இந்தக் கீரையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கின்றன.
முருங்கைக் கீரையில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் வலிமையைக் கூட்டுகிறது, தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்கிறது.
முருங்கைப் பூவை நன்கு வெயிலில் உலர்த்திப் பொடி செய்து, அதை பாலில் சேர்த்துக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால், சிறுநீரக மண்டலத்தைச் சீராக்குவதுடன், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.