ஜெயலலிதாவின் மரணம் குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தினால் தான் தமது தர்மயுத்தம் வெற்றி பெறும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே நகர் பிரசாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது, அவரை மேலதிக சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லலாம் என்று நான் விஜயபாஸ்கரிடம் கூறினேன்.
ஜெயலலிதாவிற்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் நம்மை வீடு தேடி வந்து அடிப்பார்கள் என்றும் அவரிடம் கூறினேன். ஆனால் விஜயபாஸ்கர் இந்த விடயத்தை கேட்டும் கேட்காமலும் இருந்து விட்டார்.
ஜெயலலிதா மரணத்தில் உரிய நீதி விசாரணை நடத்தி அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முன்னரும், பின்னரும் நடந்தது என்ன? என்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தினால் தான் நம்முடைய தர்மயுத்தம் வெற்றி பெறும்.
பினாமி ஆட்சி விரைவில் அகற்றப்படும். புரட்சி தலைவி அம்மா அரசு தமிழகத்தில் அமையும். அப்போது ஜெயலலிதா அம்மாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும்” எனவும் இதன் போது உறுதியளித்துள்ளார்.