எம்மை சிறையில் அடைத்தாலும் தேசிய அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளை கைவிடப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார்.
பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னிலையான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்தி, நாட்டில் வறுமையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பவதற்காகவே மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை புறக்கணித்து, இந்த நல்லாட்சிக்கு வாக்களித்தனர்.
ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தும் நாட்டில் முன்னேற்றகரமான மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டதாக இல்லை. அதேவேளை, எம்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி எம்மை சிறையில் அடைப்பதற்கான சூழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. அவ்வாறு நாம் சிறையிலடைக்கப்பட்டாலும், தேசிய அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.