வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, அதன்மூலம் நாட்டை வளப்படுத்துவதற்குரிய உறுதியான திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லை என முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சாடியுள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரால் வடக்கு- கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், நாட்டின் பெரும் வளமாகக் கருதப்படும் இளைஞர் யுவதிகளை இந்த அரசாங்கம் இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளியுள்ளதுடன், நாட்டில் ஸ்திரமற்ற நிலையை தோற்றுவித்துள்ளது.
யுத்த சூழ்நிலையில் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்விகற்று, பட்டதாரிகளாகியுள்ள இளைஞர் யுவதிகளை இந்த அரசாங்கம் அவமதித்து வருகின்றது. வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 40 நாட்களாக போராடி வருகின்ற போதிலும், அதனை அதிகாரம் படைத்தவர்களென கூறிக்கெண்டிருப்பவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வேதனைக்குரியது. நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது.
நல்லாட்சிக்கு ஆதரவாகவும், எதிர்கட்சியாகவும் இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தை கவனத்திற் கொள்ளாது இருப்பது வெறுக்கத்தக்க வேதனைக்குரிய விடயமாகும். இதற்கு அரசாங்கம் மிக விரைவாக ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி என கூறுபவர்களால் வருடக்கணக்கில் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். ஆனால் நல்லாட்சி அரசு, கூட்டமைப்பினரை ஏமாற்றுவதைப்போல் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டார்.