Loading...
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் ஆண்டனி, தற்போது பல படங்களில் நடித்து முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வருகிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி அடுத்ததாக ‘அண்ணாத்துரை’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
சீனு வாசன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இப்படத்தை ராதிகா சரத்குமார் தனது பேனரில் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ள இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் ஆண்டனி, கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். `காளி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப் மூலம் தானே தயாரிக்க உள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. `அண்ணாதுரை’ படத்திற்கு பின்னர் `காளி’ படம் வெளியாகும் என்றும் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான `எமன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறாவிட்டாலும், வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றது. கடந்த 1980-ல் மகேந்திரன் இயக்கத்தில் `காளி’ என்ற படத்தில் ரஜினி, நடித்திருந்தார். இப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Loading...