முதல் தடவையாக இலங்கையில் இருந்து விசாகபட்டினத்திற்கான விமான சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
அந்தவகையில் கொழும்பில் இருந்து விசாகபட்டினத்திற்கு இடையிலான குறித்த சேவையானது எதிர்வரும் யூலை மதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இந்தியாவின் ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, காலை 7:15 அளவில் கொழும்பில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானமானது, 9 மணியளவில் விசாகப்பட்டினத்தை அடையும் என்றும்.
மீண்டும் 10 மணியளவில் விசாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் விமானமானது மதியம் 12.15 மணியளவில் கொழும்பை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான சேவையானது மக்களின் நலன்கருதி வாரத்தில் நான்கு நாட்களுக்கு சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது இருநாட்டு சுற்றுலா நடவடிக்கைகளை விருத்தி செய்யும் முகமாக கடந்த 6 மாதங்களில் 3 தடவை விசாகபட்டினத்திற்கு விஜயம் மேற்கொண்டு கள ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளதாக ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலாதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இலங்கை சுற்றுலா பயணிகள் விசாகபட்டினத்திற்கு வருகை தந்தமையினை அடுத்து சுற்றுலா விசாக்களை அங்கேயே பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.