Loading...
வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு நிதி உதவி மற்றும் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி விவசாயிகள் சங்க தலைவர் காசியண்ணன் தலைமையில் ஈரோட்டில் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா தெய்வசிகாமணி வரவேற்றார்.
விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்த 25 பேருக்கு நிதிஉதவி மற்றும் தலா 2 கறவை மாடுகள் வழங்கினார்.
எனது தாயை எனது கண்எதிரில் பார்க்கும் தெய்வமாக பார்க்கிறேன். அடுத்து எனது ரசிகர்களையும், விவசாயிகளையும் எனது தெய்வங்களாக நினைக்கிறேன்.
வறட்சி காரணமாக இறந்த விவசாயிகளின் மரணம் என்னை மிகவும் பாதித்தது. இறந்த விவசாயியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் கொடுத்தேன்.
இந்த பணம் ரசிகர்கள் கொடுத்த பணம். எனவே பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளின் குடும்பத்தினருக்கும் உதவுவது என்று முடிவு செய்தேன். இதற்கான முதல் கட்ட உதவி தான் இது.
எனக்கு அரசியல் தெரியாது. தெரியாத விஷயத்துக்குள் போகமாட்டேன். ஆனால் எனக்கு தர்மம் செய்ய தெரியும். விவசாயிகள் தங்களது மனைவியின் தாலியை பாங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கி விட்டு அதை திருப்ப முடியாமல் தவிக்கிறார்கள். இவர்களில் முதல் கட்டமாக 2 பேருக்கு வங்கியில் இருந்த தாலிக்கொடியை மீட்டு கொடுத்து இருக்கிறேன்.
நான் எப்போதும் தலைவனாக வேண்டும் என்று நினைத்தது இல்லை. தலைவனாக இருந்தால் தலைக்கனம் வந்து விடும். இதனால் எப்போதும் தொண்டனாக இருந்து நீண்ட நாள் மக்களுக்கு தொண்டு செய்யவே விரும்புகிறேன்.
எனது `மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் வருமானத்தில் ரூ. 1 கோடியை இளைஞர்களுக்காக ஆனந்த விகடன் அறகட்டளை மூலம் வழங்கினேன்.
அடுத்து வரும் `சிவலிங்கா’ படத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை விவசாயிகளுக்காக நானே நேரடியாக வழங்குவேன்.
என்னை சண்டை இயக்குனர் சூப்பர் சுப்பராயனும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் சினிமாவுக்கு அழைத்து வந்தனர். தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சினிமா டைரக்டர் கரு.பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
Loading...