ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்க வாங்கிய கடனை 2017 ஆம் ஆண்டுக்குள் செலுத்தவில்லை என்றால், கடந்த அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைக்கு அமைய துறைமுகத்தின் உரிமையை சீன நிறுவனத்திற்கு எழுதி கொடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மக்கேசர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் 2017 யோவுன் புரய நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எந்த தரப்பினர்களும் பல்வேறு குற்றச்சாட்டை முன்வைத்தாலும் பிரச்சினையில்லை. நாட்டை முன்னேற்ற வேண்டிய தேவை இருக்கின்றது.
கடனை திருப்பி செலுத்தாது துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவதா அல்லது அரசாங்கத்தின் கீழ் வைத்து கொண்டு அபிவிருத்தி செய்வதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
மிகப் பெரிய கடன் பொறியாக மாறியுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை எதிர்காலத்தில் தேசிய சொத்தாக மாற்ற வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்க மகிந்த ராஜபக்ச சீனாவின் எக்ஷிம் அபிவிருத்தி வங்கியிடம் 130 கோடி டொலர்களை கடனாக பெற்றுக்கொண்டார்.
5 வருடங்களுக்கு பணத்தை சம்பாதிக்க முடியும் எனவும் 2016 ஆம் ஆண்டுக்குள் பெற்ற கடனை திரும்ப செலுத்தி விட முடியும் என அதிகாரிகள் கூறியிருந்தனர். எனினும் துறைமுகத்தின் மூலம் வருமானம் கிடைக்கவில்லை.
பாரிய சிரமத்திற்கு மத்தியில் 20 கோடி டொலரை மாத்திரமே எம்மால் செலுத்த முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு சீன ஜனாதிபாதி இலங்கைக்கு வந்தார்.
அப்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது.
இதனடிப்படையில் சீன அரசாங்கம் தனது கடல் வழி திட்டத்தில் ஹம்பாந்தோட்டையை உள்ளடக்கியதுடன் துறைமுகத்தின் ஒரு பகுதியை அபிவிருத்தி செய்ய அது சீனாவின் இரண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
எனினும் இந்த முறையானது இலங்கைக்கு பாதிப்பானது என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். இந்த முறையின் கீழ் நாம் கடனை திருப்பி செலுத்தும் போது சீன நிறுவனமே இதன் மூலம் வருமானத்தை பெறும்.
இது புதுமையான முறை. நாங்கள் விளக்கேற்றினால், அவர்களுக்கே புண்ணியம் கிடைக்கும். இதனால், நாங்கள் புதிய உடன்படிக்கை மூலம் அதனை மாற்றியமைத்துள்ளோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.