கையிலாய மலையில் சிவபெருமான் தனது தேவி பார்வதியுடன் அமர்ந்திருக்கிறார். நந்தி பகவான் மிருதங்கம் இசைக்கத் தேவ கணங்களும் அசுர கணங்களும் எம்பெருமானின் புகழைப் பாடி மகிழ்ந்திருக்கின்றனர்.
நன்மை-தீமை, இன்பம்-துன்பம், இனிப்பு-கசப்பு, சரி-தவறு, நல்லது-கெட்டது, பாவம்-புண்ணியம் என இரண்டுவிதமான பாசிட்டிவ் -நெகட்டிவ் செயல்களினால் அனுதினமும் உலகில் அனைவரது வாழ்க்கையிலும் அரங்கேற்றம் செய்து விளையாடும் ஈசன், அன்றைய தினம், நாரதர் மூலம் நல்லதொரு நாடகத்தை அரங்கேற்றினார்.
நாரதர், மாங்கனியை சிவபெருமானுக்குக் கொடுத்து நாடகத்தைத் தொடங்குகிறார். அபூர்வமான மாங்கனியை ஈசனுக்கு வழங்குகிறார். அதை அவர், தனது மனைவி பார்வதி தேவிக்கு வழங்குகிறார். அவரோ தன் பிள்ளைகளுக்கு தர எண்ணுகின்றார். இந்த இடத்தில்தான் நாடகத்தில் ட்விஸ்ட்!
நாம் வெயில் காலத்தில், மதியம் சாப்பாட்டுக்கு வாங்கிவரும் மாம்பழத்தை வெட்டி துண்டுகளாக்கி, குடும்பத்தில் எல்லோரும் சாப்பிடுவதுபோல் சாப்பிட்டிருந்தால் பிரச்னை இல்லை.
பழத்தை வெட்டாமல் சாப்பிட வேண்டுமெனக் கூறி, ஒரு குழப்பு குழப்பி விடுகின்றார் நாரதர். சரி, யாருக்குப் பழத்தை முழுவதுமாக வழங்குவதென்பதற்காக போட்டி அறிவிக்கப்படுகின்றது. உலகின் முதல் ‘பங்காளிப் போட்டி’ இதுவாகத்தானிருக்கும்.
‘உலகத்தை யார் முதலில் வலம் வருகிறார்கள்’ என்னும் போட்டி விநாயகனுக்கும் முருகனுக்கும் அறிவிக்கப்படுகிறது. முருகன் உலகை வலம் வரக் கிளம்ப, விநாயகரோ, ‘அமையப்பன்தான் உலகம். உலகம்தான் அம்மையப்பன் ‘என்று அவர்களை மட்டும் வலம் வந்து பழத்தைப் பெற்றுக்கொள்கிறார். இந்தத் தப்பாட்டத்துக்கு உடன்படாமல் சிவபெருமான் அன்றே முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.
அவர்தான், ‘அலகிலா விளையாட்டுடையவன் ஆயிற்றே’ எப்படி விடுவார்? அதிசய மாங்கனியை விநாயகருக்கு வழங்கிட, முருகன் கோபித்துக்கொண்டுப் போய், ‘என் நாடு என் மக்கள்’ என பழநி மலையில் நிற்கின்றார். ஒளவைப் பாட்டி முருகனின் அகம் மகிழப் பாடியும், அவரோ மனம் இறங்கவில்லை.
பார்வதிப் பிராட்டியார், சமாதானம் சொல்கிறார். ஈசனின் திருவிளையாடல்களைச் சொல்லச் சொல்ல முருகன் மனம் மாறுகின்றார். நிறைவாக, ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென’ இறைவன் வரமளிக்கின்றார். தமிழ்கூறும் நல்லுலகின் தமிழ்க்கடவுளாக முருகப்பெருமான் இன்றளவும் போற்றப்படுகின்றார்.
அதிசயமான அந்த மாங்கனியை சிவபெருமான் உலகை வலம் வந்த முருகனுக்கே வழங்கி, அவரை ஏப்ரல் ஃபூல் ஆக்காமல் இருந்திருந்தால், இந்த உலகில் என்னவெல்லாம் நிகழ்ந்திருக்கும் என்பதைப் பார்ப்போம்.
* அறுபடை வீடுகளில் ஒன்றாகப் பழநி இருந்திருக்காது.
* ஔவையார் ஆத்திசூடியைப் பாடி இருக்க மாட்டார்.
* போகர் சித்தர், நவபாஷாண சிலையை வடித்திருக்க மாட்டார்.
* புகழ்பெற்ற ‘ஔவையார்’ திரைப்படம் வந்திருக்காது.
* கே.பி.சுந்தராம்பாள் திரை உலகில் பெரும்புகழ் பெற்றிருக்க மாட்டார்.
* தனிக்குடித்தனம் போகும் வழக்கம் உலகில் வந்திருக்காது.
* தருமியாக நாகேஷ் புகழ்பெற்றிருக்க மாட்டார்.
* ஏ.பி.நாகராஜன் ‘திருவிளையாடல்’ படத்தை இயக்கி இருக்க மாட்டார்.
* புத்திசாலித்தனம் என்ற பெயரில் நடந்த உலகின் முதல் குறுக்குவழிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும்.
* உழைப்பின் அருமையை உலக மக்கள் அனைவரும் உணர்ந்திருப்பார்கள்.
* நான் இந்தத் துணுக்குத் தோரணத்தைக் கட்டி இருக்க முடியாது!