தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பாடலாசிரியர் நா.முத்துக்குமார். இவர் எழுதிய பாடல்கள் என்றும் மனதை விட்டு நீங்காதவை. அப்படி இவர் எழுதிய ஒரு பாடல் மட்டும் ரூ.1.25 கோடி வருமானத்தை தயாரிப்பாளருக்கு பெற்று தந்துள்ளது.
புதியவர் சஜன் ஹீரோவாகவும், அஞ்சனா கீர்த்தி ஹீரோயினாகவும் நடிக்க, அறிமுக இயக்குநரந் வினோத் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‛யாகன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக நமீதா, ஜேஎஸ்கே சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மறைந்த நா.முத்துகுமாரின் குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. இதை முத்துகுமாரின் மகன் பெற்றுக்கொண்டார். யாகன் படத்திற்கு முத்துகுமார் தான் பாடலாசிரியர் என்பதால் அவருக்கு இந்த தொகையை படக்குழு சார்பில் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய ஜே.எஸ்கே சதீஷ்… பெரிய நடிகர்களின் படங்களை வாழ்த்த ஏகப்பட்ட திரைபிரபலங்கள் வருவார்கள். ஆனால் சிறிய படங்களை வாழ்த்த எங்களை போன்றவர்கள் தான் வருவார்கள். இந்த மேடை மிகவும் முக்கியமானது. இந்த படத்திற்கு பாடல் எழுதியிருப்பவர் என் நண்பர் நா.முத்துகுமார். இரண்டு தேசிய விருதுகள் வாங்கும்போது என் அருகில் அவர் இருந்தார். முத்துகுமார் ஒரு ஞானி என்று தான் நினைக்கிறேன். அவரின் குடும்பம் நல்ல நிலைக்கு வர ஆண்டவனை வேண்டுகிறேன்.
‛தங்கமீன்கள் படத்தில் அவரின் ‛‛ஆனந்த யாழை… பாடல் மறக்க முடியாதது. என்னை வியாபாரத்தில் சிந்திக்க வைத்த பாடல். சினிமாவில் நிறைய வியாபாரம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய பாடல் அது. தங்கமீன்கள் பாட்டை மொத்தமாக ஒரு ஆடியோ நிறுவனத்திற்கு கொடுத்திருந்தோம்.
அதில் இந்த ஒரு பாட்டு மூலம் மட்டும் ரூ.1.25 கோடி கிடைத்தது. அடுத்தது ரம்மி என்ற பாடல் மூலம் 75 லட்சம் கிடைத்தது. இப்படி பல வியாபார விஷயங்களை தெரிந்து கொண்டேன். சினிமா என்பது கோடிகள் புழங்கும் இடம். ஆகவே, வியாபார நுணுக்கங்களை தெரிந்து கொண்டு சினிமாவில் இறங்குங்கள். வியாபாரம் தொடர்பான எந்த விஷயத்திற்கும் எங்களை அணுகலாம், நான் உதவ தயாராக உள்ளேன்.
இசை வெளியீடு என்ற பெயரில் ஏகப்பட்ட பணத்தை வாரி இறைக்காதீர்கள். அதற்கு செலவு செய்வதை பல நல்ல விஷயங்களுக்கு அந்த பணத்தை பயன்படுத்தலாம். யாகன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.