1950-70-களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகை சாவித்ரி. நடிகையர் திலகம் என போற்றப்பட்ட இவரது வாழ்க்கை வரலாற்றை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் படமாக எடுக்க உள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா கதாநாயகிகளாக ஒப்பந்தமாகி உள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ், சாவித்ரி வேடத்திலும், சமந்தா மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் வெளியான தகவலின்படி, இப்படத்தில் காதல்மன்னன் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து படக்குழுவிடம் கேட்ட போது, சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், தேதி இல்லாததால் சூர்யா இப்படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார்.
‘மகாநதி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாம். இப்படத்தை வைஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.