மன்னார் முசலி பிரதேசத்தில் நில மீட்பு போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டி ஆகிய கிராம மக்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இன்று (திங்கட்கிழமை) காலை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து 12ஆவது நாளாகவும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
இம் மக்கள் முன்னெடுத்துச் செல்லும் நில மீட்பு போராட்டம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், குறித்த மக்களின் பிரச்சினைகளை நேரில் சென்று பார்வையிட்டு அம்மக்களுடன் கலந்துரையாடுவதற்கு சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ‘சயில் செட்டி’ உள்ளிட்ட குழுவினர் முள்ளிக்குளம் பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது முள்ளிக்குளம் மக்கள் தமது பூர்வீக நிலம் பலவந்தமாக அபகரிக்கப்பட்டமை மற்றும் தாம் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட குழுவினரிடம் தெரிவித்ததுடன் தமது நிலம் மீட்கப்படும் வரை தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம் என தெரிவித்துள்ளனர்.
இச் சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச்செயலாளர் சயில் செட்டி, “முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தமது நிலம் மீட்பிற்காக நீண்ட நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக அறிந்தோம். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை சந்திப்பதற்காக இன்றைய தினம் சர்வதேச மன்னிப்புச் சபையின் சார்பாக நாங்கள் இங்கு வந்தோம். இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக எமக்கு முறைப்பாடு கிடைக்கின்றது.
சுமார் 10 வருடங்களுக்கு மேலாக முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது நிலங்களை இழந்து தவிக்கின்றனர். இம் மக்களின் போராட்டம் நியாயமானது. இவர்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் உயர் மட்டங்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.