ஸ்பெய்னின் தெற்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள பிரித்தானியாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஜிப்ரல்டர் எனும் வெளிநாட்டு பகுதியை, பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளின் போது கேடயமாக பயன்படுத்த இடமளிக்கப்படாது என ஜிப்ரல்டரின் முதலமைச்சர் ஃபேபியன் பிக்கார்டோ (Fabian Picardo) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள செய்தியில், “பிரித்தானியாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருக்கவே நாம் விரும்புகின்றோம் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விளக்கி ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல் வரைபில், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகியமையின் பின்னர் ஜிப்ரல்டரின் தீர்மானம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஸ்பெயினினாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்பெய்ன் மற்றும் பிரித்தானியாவுக்கு இடையில் ஜிப்ரல்டர் தொடர்பில் உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்பட்டாலேயே ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவுடனான உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஜிப்ரல்டருக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் அதிருப்தி அடைந்துள்ள ஜி ப்ரல்டர், அரசியல் நலன்களை கருத்திற் கொண்டு ஸ்பெயின் நாடே ஐரோப்பிய கவுன்சிலை வலியுறுத்தியிருக்கலாம் என தெரிவித்துள்ளது.