`பூ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பார்வதி. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பார்வதிக்கு தமிழில் தொடர்ந்து படவாய்ப்புகள் வராததால் மீண்டும் மலையாளத்தில் நடித்து வந்தார். அதே நேரத்தில் அவ்வப்போது தமிழிலும் நடித்தார். `பூ’ படத்திற்கு பின்னர், `சென்னையில் ஒரு நாள்’, `மரியான்’, `பெங்களூரு நாட்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பார்வதி, இதுவரை நடித்துள்ள படங்கள் அனைத்திலுமே கனமான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பார்வதி, தான் குறைவான படங்களில நடித்திருப்பதற்கு சில காரணங்களை கூறியுள்ளார். தனக்கு நிறைய படவாய்ப்புகள் வந்தும், அதனை வேண்டாம் என்று ஒதுக்கியதாக கூறிய பார்வதி, அதிர்ச்சியான காரணத்தையும் கூறியுள்ளார்.
அது என்னவென்றால், பட வாய்ப்பு தருவதாக கூறி, தன்னை தகாத உறவுக்கு சிலர் அழைத்துள்ளதாக கூறியுள்ளார். சினிமாத்துறை என்றால் அப்படி தான் இருக்கும் என்று சிலர் போதனையும் செய்வார்கள். சில நேரங்களில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் கூட அவ்வாறு தன்னை அழைத்துள்ளனர். இவ்வாறு தன்னை அனுசரிக்க அழைப்பவர்களின் படங்களின் தான் நடிக்க மறுத்துவிட்டதாகவும் பார்வதி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மலையாள சினிமாவில், இதுபோன்ற பிரச்சனைகளை, தான் பல முறை சந்தித்துள்ளதாக கூறிய பார்வதி, தமிழ், கன்னடம், இந்தி மொழி படங்களில் இதுவரை அதுபோன்ற பிரச்சனையை சந்தித்ததில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
அதிக வருடங்கள் தனக்கு பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததற்கு அதுதான் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.