“நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார். அவரைப்போல, மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக்கொண்ட பேரினம் ஏதாகிலும் உண்டா?“ நம் தந்தையாகிய கடவுள் மனித உயிர்கள் ஒவ்வொன்றையும் நேசிக்கின்றவர். அவர் எப்போதும் தன்னுடைய நெருங்கிய உறவில் வாழ வேண்டும் என்று விரும்புகின்றவர். (இணைச்சட்டம் 4:7)
இதனை, தொ.நூல் 2:15 வசனம் இவ்வாறு எடுத்துக்கூறுகிறது; மனித குலத்தை படைத்த கடவுள், அவர்களை ஏதோன் தோட்டத்தில் குடியிருக்க செய்தார். கடவுளோடு நெருக்கமான உறவில் வாழ வேண்டிய மனிதன் சாத்தானின் சூழ்ச்சியில் வீழ்ந்து, பாவம் செய்து கடவுளுக்கு தூரமாக போனான் (தொ.நூல் 3:9-10). பாவத்தினால் கடவுளை விட்டு தூரமாக போக வேண்டும், அவரிடம் நெருங்கி வரக்கூடாது என்ற உணர்வு மனிதனை இன்னும் வாட்டி வதைக்கிறது.
இன்றைய காலசூழ்நிலையில், போதை பழக்கத்திற்கு அடிமையாகி மீளமுடியாமல் தவிப்பது, ஆடம்பர வாழ்க்கையில் உண்மை ஆன்மிகத்தை தொலைத்திருப்பது, பணப்பேராசையால் வீழ்ந்து கிடப்பது, மனித சமூகத்தில் நீதி, நியாயங்களை கண்டு பிடிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருப்பது, இவைகள் யாவுமே கடவுளை விட்டு தூரமாகவே இருக்க வேண்டும் என்ற பாவ அடிமைத்தனத்தை காட்டுகிறது.
எனவே, கடவுளுக்கு தூரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அகற்றி விட்டு, கடவுளை நேசிக்க நாம் நெருங்கி வர வேண்டும் என்ற உணர்வை பெற வேண்டும். இயேசுவின் சிலுவைப்பாதைகளை தியானிக்க, தியானிக்க கடவுள் நம்மோடு கொண்டுள்ள நெருக்கமான உறவு புரியும். அதனால் தான் தவக்காலத்தில் ஜெபத்தில் ஈடுபடுவது தலையானது.
மேலே கூறிய இணைச்சட்ட நூல் வசனம் என்பது, நம் உள்ளத்தில் பதிக்கப்பட வேண்டிய வசனம். தவக்காலம் உண்மையான மாற்றத்தை கொண்டுவர, கடவுளின் நெருக்கமான அன்புறவை அதிகமாக தியானிப்போம். இடைவிடாது ஜெபத்தில் நிலைத்திருப்போம். இறைவனோடு நெருக்கமான உறவில் வாழ ஆசைப்படுவோம்.
அருட்திரு. வே.பீட்டர்ராஜ், பங்குத்தந்தை, ஆத்தூர்.