ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் முகமாக கட்சியின் மத்திய செயற்குழு இன்று (புதன்கிழமை) சிறிகொத்தவில் கூடவுள்ளது.
ஐ.தே.கவின் தலைமைத்துவ பொறுப்புகளை கட்சியின் இரண்டாம் தலைமுறையினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் அதுகுறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இதுவரை ஒன்றாக இருக்கும் பிரதித் தலைவர் பதவி மூன்றாக அதிகரிக்கப்படவுள்ளது. அதில் சிறுபான்மையினத்தவர் ஒருவரும் இடம்பிடிப்பாரென கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமாக, கட்சியின் உபதலைவராக இருக்கும் அமைச்சர் ரவி கருணாநாயக்க அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அதற்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளதாகவும் ரவிக்கு பிரதித் தலைவர் பதவி கிடைக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, கட்சியின் பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்படவுள்ளதாகவும் தற்போது பொதுச் செயலாளராக உள்ள கபீர் ஹாசீமிற்கு பிரதித் தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.