தமிழ் மக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான சூழல் இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும் என இந்திய எழுத்தாளரும் இந்திய மாநிலங்களவை உறுப்பினருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் தினேஷ் வீரக்கொடியினால் எழுதப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வாழ்க்கை வரலாறு குறித்த நூல் வெளியீட்டு விழா நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“கடந்த முப்பது வருட காலமாக நடைபெற்ற யுத்தத்தினால் மக்கள் பாரிய துன்பங்களை எதிர்நோக்கியுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்தியா எப்போதும் தயாராக உள்ளது.
மேலும், இலங்கை அரசியலமைப்பு உருவாக்க பணிகளில் இந்தியாவின் அனுபவங்களை இலங்கை அரசாங்கம் உள்வாங்க வேண்டும். அரசியலமைப்பு உருவாக்க பணிகளில் இந்தியா கடினமான பல பாதைகளை கடந்து வந்துள்ளது. அதன்மூலம் நாம் பெற்ற அனுபவங்களை இலங்கையின் புதிய அரசியலமைப்பிற்கு வழங்க தயாராக உள்ளோம்” என்று குறிப்பிட்டார்.