புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முதலாவது சந்தேக நபரின் பிள்ளைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிக்கு உத்தரவு இட்டுள்ளார்.
மாணவி கொலை வழக்கு இன்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது மன்றில் சந்தேகநபர்கள் முற்படுத்தப்பட்டனர்.
அவ்வேளை முதலாவது சந்தேக நபர் தனது மூன்று பிள்ளைகளும் குடும்ப வறுமை காரணமாக யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் பண்ணை பகுதிகளில் கச்சான் விற்கின்றார்கள். நான் குற்றமே செய்யாமல் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டு உள்ளேன் என நீதிவானிடம் முறையிட்டார்.
கல்வி கற்கும் வயதில் வறுமை காரணமாக கச்சான் விற்பதை ஏற்க முடியாதுஇ அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிக்கு நீதிவான் உத்தரவு இட்டார்.