நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், வக்கீலுமான சந்திரஹாசன் கடந்த மாதம் மார்ச் 19-ந் தேதி லண்டனில் உள்ள தனது மகள் அனுஹாசன் வீட்டில் காலமானார். இந்நிலையில், சந்திரஹாசனின் மறைவுக்கு இன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
இதில், கமல், ரஜினிகாந்த், சாருஹாசன், அனுஹாசன், அக்ஷராஹாசன், சுஹாசினி, ராம்குமார், கே.எஸ்.ரவிக்குமார், கிரேஸி மோகன், மௌலி, பிரமிட் நடராஜன், லிசி, அம்பிகா, ரோகிணி, புஷ்பா கந்தசாமி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.
அப்போது கமல் பேசும்போது, என்னுடைய நினைவுக்கு தெரிந்து சந்திரஹாசனின் அறிவுரை இல்லாமல் நான் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும். இதை நான் இரங்கல் கூட்டமாக நினைக்கவில்லை, ஒரு விழாவாகத்தான் நினைக்கிறேன். மூன்றரை வயதில் நான் சினிமாவுக்கு வந்தேன். எனது அண்ணன்தான் எனக்கு பலம். சகோதரர் எப்படி இருக்கவேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தவர் சந்திரஹாசன். ஒரு சகோதரனாக இருப்பதுகூட பெரிய பொறுப்புதான்.
சந்திரஹாசன் யாரையும் சத்தமாக அழைக்கமாட்டார். சுருக்கமாகவும், அதை நேரத்தில் மரியாதையாகவும் பேசுவார். பிச்சைக்காரர்களைக்கூட ஒருமையில் பேசியது கிடையாது. அந்தளவுக்கு மரியாதையானவர். அவரிடமிருந்துதான் நானும் மரியாதையை கற்றுக்கொண்டேன்.
ஸ்டார் ஹோட்டலில் தங்கமாட்டார், அவருடைய துணியை அவரேதான் துவைத்துக் கொள்வார். அந்தளவுக்கு எளிமையானவர். அவரிடம் நான் கற்றுக் கொண்டது ஏராளம். என்னுடைய சோம்பேறித்தனத்தால் நிறைய கற்றுக்கொள்ளாமல் இருந்துவிட்டேன். இனி அதை பின்பற்ற முயற்சி செய்கிறேன்.
அண்ணன் இல்லாத வாழ்க்கை எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், அதை தாங்குவதற்கான பயிற்சியை எனக்கு கொடுத்துவிட்டு சென்றுள்ளார். பிறப்பு, இறப்பு என்பது அனைவருக்கும் உண்டு. ஆனால், எப்படி இருந்தோம், மற்றவர்கள் சொல்லும்படி எப்படி வாழ்ந்து காட்டினோம் என்பதுதான் பெரிய விஷயம். என்னால் அதையெல்லாம் செய்யமுடிகிறதா? என்று பார்ப்போம்.
சந்திரஹாசன் என்றும் எனது நிழலாக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால், இயற்கை அவரை எடுத்துக்கொண்டது. இருந்தாலும், என்னுள் ஒரு பாகமாக அவர் கலந்துவிட்டார். சந்திரஹாசனின் குரல் எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும். அதுதான் என்னை வழிநடத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.